இங்கிலாந்துடனான டெஸ்டை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்கும் இந்தியா

இங்கிலாந்துடனான டெஸ்டை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா அணி களமிறங்க உள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. 3-வது டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

இந்நிலையில், இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழந்து விடும் என்பதால் இந்திய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, முடியாத பட்சத்தில் போட்டியை சமன் செய்ய முயற்சிப்பார்கள் என கூறப்படுகின்றது.

இந்திய பேட்டிங்கில் விராட் கோலி 2 சதம், 2 அரை சதத்துடன் 440 ரன் குவித்துள்ளார். சராசரி 73.33 ஆகும். புஜாரா, ரகானே ஆகியோர் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளனர்.

இதேபோல ஹர்த்திக் பாண்டியாவும் கடந்த டெஸ்டில் ஆல்ரவுண்டர் வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். வேகப்பந்து வீச்சில் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இறங்குவது அதற்கு கூடுதல் பலமாக அமைந்த போதிலும், இந்திய அணிக்கு வெற்றி பெற முடியாவிட்டால் டெஸ்ட் போட்டியை சமன் செய்து, தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ளும்.

எனவே, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி விருவிருப்பாக நடைபெற வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

தொடர்ந்து, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]