ஆஸி.கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா

பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரும் ராஜினமா செய்துள்ளனர்.

இவ் விவகாரத்தினால் கேப்டன் பதவியை இழந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், போட்டி ஊதியத்தில் இருந்து 100 சதவீதத்தை அபராதமாகவும் செலுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று அதிரடியாக உத்தரவிட்டது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவானது. இதையடுத்து பேட்டி அளித்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்காக திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்தும், துணைக் கேப்டன் பதவி டேவிட் வார்னரிடம் இருந்தும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரணை நடத்தினார். அதன்பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஐசிசியின் வீரர்களுக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளின்படி, வீரர்கள் மற்றும் வீரர்களுக்கு ஆதரவாக செயல்படும் உதவியாளர்களின் நடத்தை கிரிக்கெட் விளையாட்டுக்கு ஒருபோதும் விரோதமாக இருந்துவிடக்கூடாது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், அவருக்கு 2 சஸ்பென்ஷன் புள்ளிகள் அளித்து, அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுகிறது. மேலும், 4 மைனஸ் புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், போட்டியின் ஊதியத்தின் முழுத்தொகையையும், அதாவது 100 சதவீதத்தையும் அபராதமாக அளிக்க வேண்டும்.

பந்தை சேதப்படுத்திய மற்றொரு வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமும், 2 மைனஸ் புள்ளிகளும் அளிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் போட்டியின் எழுச்சிக்கு விரோதமாக, செயல்பட்டுள்ளது, போட்டியின் நேர்மை தன்மைக்கு ஊறுவிளைவித்துள்ளது. இந்த நடவடிக்கை அனைத்துக்கும் ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் இன்னும் ஒழுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படுவது அவசியமாகும். சமீபகாலங்களாக வீரர்களுடன் வம்பிழுப்பது, அவர்களை கிண்டல் செய்வது, நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, போட்டியை புறக்கணித்துச் செல்வது, பந்தை சேதப்படுத்துதல் ஆகிய விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் தவிர்க்க ஐசிசி முனைப்படும் செயல்படும். ஐசிசியில் உள்ளஉறுப்பு அணிகளும் ஒழுக்க விதிகளை காக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விக்கெட் கீப்பர் டைம் பைனி செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]