ஆஸியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா

தரம்சாலாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 21 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நான்காவது இறுதியுமான டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் கடந்த 25ஆம் திகதி தொடங்கியது.

போட்டியில் நாணயசுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தெரிவுசெய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸி. அணியின் தலைவர் ஸ்மித் அபார சதமொன்றையும் விளாசியிருந்தார். இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் கைப்பற்றியிருந்தார்.

தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 332 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லையன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் மற்றும் ஓ கீபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

32 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 137 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தனர்.

106 ஓட்டங்களைப் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களை எடுத்திருந்தது. நான்காம் நாளான இன்று ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்த 106 ஓட்டங்களை 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. தலைவர் ரஹானே 38 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 51ஓட்டங்களையும் எடுத்து இந்தியாவை வெற்றியை உறுதி செய்திருந்தனர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 21 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]