ஆஷஷில் பற்றின்சன் பங்கில்லை

அவுஸ்திரேலியாவின் ஆஷஷ் தொடருக்கான வேகப்பந்துவீச்சுக் கூட்டணியில் நான்காமவராக இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் பற்றின்சனின் முதுகுப் பகுதி உபாதையின் மோசமான தன்மை மருத்துவப் பணியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, ஆஷஷ் குழாமில் இடம்பெறும் வாய்ப்பை இழந்ததுடன் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் எதிர்நோக்கியுள்ளார்.

இங்கிலாந்து கவுண்டி போட்டிகளிலும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலும் விளையாடியதைத் தொடர்ந்து, நோ இருப்பதன் காரணமாக, பங்களாதேஷ், இந்தியா சுற்றுப்பயணங்களில் இடம்பெற்றிருக்காத பற்றின்சன், பந்துவீச மீளத் திரும்பிய நிலையிலேயே, முன்னைய முதுகுப் பகுதி உபாதை மோசமடைந்துள்ளது.

27 வயதான பற்றின்சனுக்கு, முன்னரே பல தடவைகள் முதுகுப் பகுதி காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதன் காரணமாகவே, தற்போது பற்றின்சன் இந்நிலையை எதிர்நோக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாண்டு ஆரம்பத்தில், காயத்திலிருந்து குணமடைந்து, உடனடியாக விளையாடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்தியாவுக்கு, டெஸ்ட் தொடருக்காக அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அணித் தேர்வில் தன்னை கவனத்திற் கொள்ள வேண்டாம் என பற்றின்சன் தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக, ஆஷஷ் தொடரில் பற்றின்சனின் பங்களிப்பில்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், பற்றின்சனுக்குப் பதிலாக, இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் சிறப்பாக பந்துவீசிய நேதர் கூல்டர்நைல், ஆஷஷ் தொடருக்கான குழாமில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஆஷஷ் குழாமில் இடம்பெறப்போகும் வேகப் பந்துவீச்சாளர்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களில், பற் கமின்ஸ் மட்டுமே தற்போது உடற்றகுதியுடன் இருக்கிறார். ஏனைய இருவரான, மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட்டும் இன்னும் உபாதைகளிலிருந்து குணமடைவதன் இறுதிக் கட்டங்களிலேயே காணப்படுகின்றனர்.