ஆவா குழுவின் நடவடிக்கை புலிகளின் மீள் எழுச்சியா?அரசின் பதிலைக் கோரும் எதிரணி

ஆவா குழு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டதை மேற்கோள்காட்டி, விடுதலைப்புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா? இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பியான பத்ம உதயசாந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றம் நேற்று வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின்போது, , சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் இந்தக் கேள்வியை அவர் எழுப்பினார்.

கிழக்கு மாகாணத்தில் ஐந்து பொலிஸ் நிலையங்களை இலக்குவைத்து விடுதலைப்புலிகள் அமைப்பு தாக்குதல் நடத்திய திகதி, அதில் கொல்லப்பட்ட பொலிஸாரின் எண்ணிக்கை, தாக்குதலின்போது சொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்பீடு மதீப்பீடு செய்யப்பட்டுள்ளதா, தாக்குதலுக்கு பொறுப்புகூறவேண்டியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரா என்று சட்டம், ஒழுங்கு அமைச்சரிடம் அவர் கேள்விகளை எழுப்பினார்.

சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று சபைக்கு வராததால் இந்தக் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக பதில்களை வழங்கினார்.

அதன்பின்னர் இடையீட்டுக் கேள்வியொன்றை எழுப்பிய பத்ம உதயசாந்த எம்.பி.,

“ஆவா குழுவின் தலைவர் உட்பட ஆறு உறுப்பினர்கள் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

விடுதலைப்புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளது என்பதையே பாதுகாப்புத் தரப்பின் தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. பொலிஸ்மா அதிபரும் இது குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

எனவே, விடுதலைப்புலிகள் அமைப்பு வடக்கில் மீள இயங்க ஆரம்பித்துள்ளனர் என வெளியாகி வரும் தகவல்கள் குறித்து அரசின் பதில் என்ன? பொறுப்புடன் பதிலளிக்கப்படுமா?” – என்றார்.

“இந்தக் கேள்வி சட்டம், ஒழுங்கு அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும். அவர் பதிலளிப்பார்” என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அதேவேளை, 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதியே கிழக்கு மாகாணத்தில் ஐந்து பொலிஸ் நிலையங்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், மேற்படி தாக்குதல்களில் 252 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக வாய்மூல கிடைக்கான கேள்வி நேரத்தில் பதிலளித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]