ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட நால்வர் கைது

யாழில் பல வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவின் பிரதித்தலைவர் உள்ளிட்ட நால்வர் இன்று கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆவா குழுவின் பிரதித் தலைவர் இணுவிலைச் சேர்ந்த விக்டர் நிசா என்றழைக்கப்படும் நிசாந்தன் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் கடந்த பல நாட்களாக ஆவா குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன்,நேற்றைய தினம் யாழின் பல பகுதிகள் பாதுகாப்பு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த இரு வாரங்களுக்கு முன்னாள் யாழ்-கோப்பாய் பகுதியில் வைத்து இரு காவற்துறை உத்தியோகத்தர்கள் மீதும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளபட்டிருந்ததுடன்,இந்த சம்பவத்திற்கு ஆவா குழுவினரே காரணம் என்றும் காவற்துறையினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த நிலையில்,காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த ஆவா குழுவின் பிரதி தலைவர் உள்ளிட்ட நால்வர் இன்று கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.