ஆவா குழுவின் உளவாளியாக செயற்பட்ட இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது

ஆவா குழுவின் உளவாளியாக செயற்பட்ட இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பிறவுண் வீதி 5 ஆம் ஒழுங்கை கலட்டிப் பகுதியைச் சேர்ந்த கஜபாலசிங்கம் நிதர்சன் வயது 17 என்ற இளைஞரே கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் அவரது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஆவா குழுவின் உளவாளியாக

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக வைத்து நேற்று (21.11) இரவு 8 மணியளவில் வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார் இளைஞரை பலாத்காரமாக கடத்திச் சென்றதாக பொது மக்களினால் தெரிவிக்கப்பட்டதுடன், இளைஞரின் பெற்றோரும் தெரிவித்தனர்.
இந்நிலையில், தாம் கடத்தியதாக பொது மக்களினால் தெரிவிக்கப்பட்ட இளைஞர் ஆவா குழுவின் உளவாளியாக செயற்பட்டு வந்தவர். பல தடவைகள் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் அவர் தப்பிச் சென்றமையினால், ரகசியமான முறையில் சிவில் வாகனத்தில் இளைஞரை கைதுசெய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

யாழ்.நகரில் உள்ள மங்கை புடவை விற்பனை நிலையத்தில் பணியாற்றும் இவர் வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த போது, சிவில் உடையில் சென்று வானில் ஏறுமாறு கூறியபோது, இளைஞர் ஏற மறுத்தார்.

அதன்போதே, இளைஞரை பலாத்காரமாக ஏற்றிச்சென்றோம். ஆங்கிருந்த பொது மக்களுக்கு கடத்தலாக தெரிந்திருக்கலாம். ஆனால், அவர் ஆவா குழுவின் பிரதான உளவாளி. யாழில் இடம்பெற்ற முக்கியமான பல வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு இவரே உளவாளி வேலை செய்தவர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டமையினாலும், தேடப்பட்ட நபர் என்ற அடிப்படையிலும் இரகசியமான முறையில் கைதுசெய்யதாகவும், பொலிஸ் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]