ஆளுநரின் அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் அங்குரார்ப்பணம்

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியேற்று முதன் முறையாக ஏறாவூருக்கு வருகை தரும்பொழுது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள்  சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தற்போதைய தலைவருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

அந்த வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் விஜயம் எதிர்வரும் 24.03.2019 காலை 09.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதுபற்றி மேலும் தெரிவித்த சுபைர், ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்கு 2 கோடி 44 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு,

ஏறாவூர் மாவட்ட ஆயள்வேத வைத்தியசாலையில் ரூபாய் 50 இலட்சம் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கும் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தியதற்கான பெயர்ப்பலகை திரை நீக்கமும்,

ஏறாவூர் புன்னைக்குடா வீதியை அண்டியுள்ள அப்பதுல் மஜீத் மாவத்தையில் சுமார் 1 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட கொங்றீட் வீதியை மக்கள் பாவனைக்காக கையளித்தல்,கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடு மற்றும் மலசலகூடம் அற்ற 50 பேருக்கு 25 ஆயிரம் ரூபாய்  இரண்டாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு, ஏறாவூரில் செயற்படும் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு என்பனவற்றுடன் அன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பு ஆகியவையும் இடம்பெறவுள்ளன.” என்றார்.

இந்நிகழ்வுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]