ஆலய அன்னதான மடத்தில் இருந்து படையினர் வெளியேற்றம்

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் அங்கிருந்து நேற்று மாலை வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 22 வருடங்களாக அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினரிடம், அங்கியிருந்து வெளியேறுமாறு மண்டப உரிமையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கடந்த 1996 ஆம் ஆண்டு அரச படைகள் யாழ். குடாநாட்டைக் கைப்பற்றியபோது, பொன்னாலையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பின்னர், ஒரு சில மாதங்களின் பின்னர் பொன்னாலை முற்று முழுதாக கடற்படையினரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

அன்று முதல் பொன்னாலை தொடக்கம் கீரிமலை வரையான கரையோரப் பிரதேசம் பொதுமக்களின் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதாக காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பொன்னாலையில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்குமாறு அப்பகுதி மக்கள் தொடர்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.

அத்துடன், கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதமே பொன்னாலையில் மக்கள் மீள் குடியமர அனுமதிக்கப்பட்டனர்.

அதன்போது, பொதுமக்களின் வீடுகள் மற்றும் கட்டடங்களில் தங்கியிருந்த கடற்படையினர் வெளியேறிய போதிலும், இரு அன்னதான மடங்களில் தொடர்ச்சியாக தங்கியிருந்தனர்.

பின்னர், அதில் அன்னதான மடம் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]