ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 28 பேர் பலி

கர்நாடக மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 28 பேர் பலியாகியுள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள கனகனமரடி கிராமத்தின் அருகேயுள்ள காவிரி ஆறு ஓடும் VC கால்வாய் பகுதி அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று மதியம் 12.30 மணியளவில் கால்வாய்க்குள் திடீரென கவிழ்ந்தது.

இந்த விபத்தை நேரில் கண்ட அருகில் இருந்த கிராமத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கால்வாய்க்குள் பேருந்து முழுமையாக மூழ்கியுள்ள நிலையில், அதில் சிக்கியவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ளக்கூட நேரம் கிடைக்காமல் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் 28 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 18 பேரது உடல்களை அங்குள்ளவர்கள் மீட்டுள்ள நிலையில், பலியானோரில் பெரும்பாலும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெண்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி ஒரேயொரு சிறுவன் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து இன்னும் முழுமையாக தெரியாத நிலையே தற்போது வரை நீடிக்கிறது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]