சட்டத்தின் மூலம் அரசியலுக்குள் நுழைவதற்குக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆர். சிவகுமாரி

காலாகாலமாக பெண்களுக்கு இருந்து வந்த பாரம்பரியத் தடைகளை நீக்கும் வண்ணம் பெண்கள் அரசியலில் நுழைவதற்கு சட்டத்தின் மூலம் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை சாதனை படைக்கும் வாய்ப்பாகப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பெண்கள், சிறுவர் உரிமைகள் செயற்பாட்டாளரும் சமூக சேவகியுமான ஆர். சிவகுமாரி தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தலில் பெண்களுக்கு சட்டத்தின் மூலம் கட்டயாமாக்கப்பட்டுள்ள 25 சதவீத பிரதிநிதித்துவம் பற்றி வியாழக்கிழமை 14.12.2017 ஊடகங்களுக்கு ஊடாக பெண்களுக்கு விழிப்பூட்டலைச் செய்த அவர் மேலும் தெரிவித்ததாவது@

பெண்களுக்களின் முன்னேற்றத்திற்கான தடைகளை நீக்குவதில் உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களுக்கு சட்டத்தின் மூலம் கட்டயமாக்கப்பட்டுள்ள 25 வீத பிரதிநிதித்துவம் என்பதே முதலில் ஒரு வெற்றியாகக் கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு சட்டம் அங்கீகரித்த விடயத்தை சமூகமும் அங்கீகரிக்க வேண்டும்.

குறிப்பாக நாட்டின் மக்கள் தொகையிலும் வாக்காளர் தொகையிலும் பாதிக்கு மேற்பட்டோர் பெண்களாகும்.

எனவே, இந்த விடயத்தில் “பெண்கள் சமூகம்” என்ற ரீதியில் இன, மத, மொழி கடந்து பெண்கள் சமூகமே முதலில் பெண்களுக்கு அந்தஸ்தை வழங்க வேண்டும்.

அந்த மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கி தேசம் என்ற வகையில் வியாபிக்க வேண்டும்.

மது விநியோக அரசியல், செல்வாக்கு, ஊழல், மோசடி, அந்தஸ்து, பாரம்பரியம், பால்நிலை  என்பனவற்றுக்கு அப்பால் பெண்கள் ஒரு மனித சமூக அங்கத்தவர் என்ற ரீதியில் பெண்களை சமூகமும் அங்கீகரிக்க வேண்டும்.

அடுப்பங்கரைப் பெண்ணால் அரசாள முடியுமா என்றால் அது முடியும் என்பதை நிரூபிக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

அபிவிருத்தியின் நுட்பம் தெரியாதவர்களாக பெண்கள் இல்லை.

மக்களோடு மக்களாக செயற்படும் பெண்கள் தமது அரசியல் வாய்ப்புக்களுக்கூடாக சாதனை படைக்க வேண்டும்.

அரசியல் என்பது சாக்கடை இல்லை, இந்த அரசியல் அந்தஸ்தின் ஊடாக சமூகப் பாகுபாட்டை இன மத பேதத்தை நீக்க பெண்கள் பாடுபட முடியும். பெண்களில் துறைசார்ந்த எத்தனையோ நிபுணர்கள் உள்ளார்கள்.

சமாதானம் வீட்டிலும் நாட்டிலும் நிலவுவதற்கு பெண்களின் பாத்தரப் பங்கு நிராகரிக்க முடியாத ஒன்று என்பதை ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண் தலைமைத்துவம் என்பது ஆண்களை நிராகரிப்பதல்ல. அது பெண்களுக்கு இழந்துபோன உரிமையை மீளத் தருவதோடு சமத்துவமான கருத்தியலைக் கொண்டது.

மதுபானத்தைக் கொடுத்தும் பணம் பொருட்களைக் கொடுத்தும் மூளைச் சலவை செய்து வாக்குச் சீட்டுக்களை வாங்கும் இழி நிலை அரசியல் கலாச்சாரத்தை பெண்கள் அரசியலுக்குள் நுழைவதன் மூலம் மாற்ற முடியும்.

வெற்றியோ தோல்வியோ இந்த அரசியலுக்குள் நுழையும் சட்ட ஏற்பாடுகளின் மூலம் பாரம்பரியத்திலிருந்து விடுபட்ட தூய்மையான புதிய அரசியல் கலாச்சாரத்தை பெண்கள் தோற்றுவிக்க வேண்டும்.” என்றார்.