ஆத்திரத்தில் பாகனை கொன்று விட்டு இரவில் பாகனை தேடி அலைந்த யானை- அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சம்பவம்

திருச்சி சமயபுரம் கோவிலில் 10 வருடங்களாக பராமரித்த பாகன் கஜேந்திரனை காலால் மிதித்து நசுக்கி கொன்ற கோவில் யானை மசினி இரவில் அவரை காணாமல் கண்களில் வழிந்த கண்ணீருடன் நின்றது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சமயபுரம் மாகாளிக்குடி அக்ரஹாரத்தைச் சேர்ந்த கஜேந்திரன், யானை மசினியை 10 வருடங்களாக குளிப்பாட்டி அலங்காரம் செய்து மகளை போல பராமரித்து வந்தார். இதற்கு உதவியாக அவரது மகன் அச்சுதனும் இருந்து வந்தார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த மசினி யானை சமீபத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த பூச்சொரிதல் விழாவில் பூக்கூடையை பாகன் கஜேந்திரனுடன் சுமந்து வந்தது மாரியம்மன் கோவில் பக்தர்கள் கண்ணில் இன்றும் நிழலாடுகிறது.

அங்குள்ள தனியார் யானைகள் விஜயா, ஜெயா ஆகியவற்றுடன் யானை மசினி காவிரி ஆற்றுக்கு சென்று குளித்து விட்டு வரும். தோழிகளுடன் மசினி நடந்து வருவதை பக்தர்கள் கண்டு பரவசம் அடைவார்கள்.

2008-ம் ஆண்டு மசினி யானை குட்டியாக இருந்த போது முதுமலை கார்குடி பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதை மீட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏற்கனவே இருந்த மாரியப்பன் என்ற கோவில் யானைக்கு பதிலாக மசினி யானை அனுப்பி வைக்கப்பட்டது.

2008-ம் ஆண்டு முதல் மசினி யானையை கோவில் ஊழியர்கள் ரவிக்குமார், ராமமூர்த்தி ஆகியோர் பராமரித்து வந்தனர். 2016 பிப்ரவரி மாதம் மசினி யானை திடீரென ஊழியர் ரவிக்குமாரை தும்பிக்கையால் தூக்கி வீசியது.

அப்போது நடந்த சம்பவத்தில் ரவிக்குமாருக்கு இரு விலா எலும்புகளும் உடைந்தன. எதனால் மசினி ஆத்திரம் அடைந்தது என விசாரித்த போது யானை கட்டப்பட்டிருந்த இடத்தில் அதிக அளவில் பறவைகள் எழுப்பிய சத்தத்தால் திடீரென ஆவேசம் அடைந்து பிளிறிய போது ரவிக்குமார் அதை தடவிக் கொடுத்து சமாதானம் செய்த போது தான் ஆத்திரத்தில் தூக்கி வீசியது தெரிய வந்தது.

இப்போதும் நேற்று 2 ஆண்டுகளுக்கு பிறகு பாகன் கஜேந்திரனை முதலில் ஆத்திரத்தில் தள்ளி விட்டது. அவர் மீண்டும் எழுந்து வந்து அங்குசத்தால் அதன் காலில் குத்திய போது தான் அவரை துதிக்கையால் காலுக்குள் இழுத்து நெஞ்சில் காலால் மிதித்துள்ளது.

இப்போது மசினி ஆத்திரம் அடைந்ததற்கும் அதிக படியான சத்தம் அதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது யாராவது அதை எரிச்சல் அடைய செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

நேற்று பகல் 9 மணிக்கு பாகன் கஜேந்திரனை காலால் மிதித்து கொன்ற மசினி யானை 2 மணி நேரத்திற்கும் மேலாக அவரை காலுக்குள்ளேயே அங்கும் இங்கும் தள்ளி விட்டும் துதிக்கையால் தூக்கி போட்டும் தனது சிறிய தந்தத்தால் குத்தியும் ஆத்திரத்தை தணித்தது.

அதன் பிறகு 20-க்கும் மேற்பட்ட பாகன்கள் மசினி யானையுடன் குளிக்க உடன் செல்லும் விஜயா, ஜெயா தோழி யானைகள் உதவியுடன் வன அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், கோயில் ஊழியர்கள் மசினி யானையை அமைதி நிலைக்கு கொண்டு வந்தனர்.

சகஜ நிலைக்கு திரும்பிய மசினி யானை தனது பாகனை கொன்றது தெரியாமல் அவரை அங்கும், இங்கும் தேடியது. கஜேந்திரனை காணாததால் அதன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததாக அருகில் இருந்தவர்கள் கூறினார்கள்.

ஒரு வழியாக இரவு 9.30 மணிக்கு தோழி ஜெயா யானை கோவிலுக்கு சென்று மசினியை வெளியே அழைத்து வர மற்றொரு தோழி விஜயாவும் அவர்களோடு சேர்ந்து கொண்டு மசினியை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தன.

அதன் பிறகு அங்குள்ள மாகாளிக்குடி கொட்டகையில் மசினி யானை இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டது. இரவிலும் அதன் நடவடிக்கையை கோவில் ஊழியர்கள் கண்காணித்தனர். நேற்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் மசினி யானை ஏற்படுத்திய பரபரப்பும், சோகமும் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இன்று சமயபுரம் கோவிலில் சகஜ நிலை திரும்பியது. காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். கோவிலுக்குள் சில பூஜைகள் செய்யப்பட்ட பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட் டனர்.

மாகாளிக்குடி கொட்டகையில் மசினி யானை விடிய விடிய கண்களில் வழிந்த கண்ணீருடன் கஜேந்திரன் வருவாரா? என காத்திருந்தது. இதை பார்த்த கோவில் ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]