ஆட்சி நல்லாட்சிதான் எனினும் ஆட்சியாளர்கள்தான் ஊழல்வாதிகள் : காதர் மஸ்தான் தெரிவிப்பு

ஆட்சி நல்லாட்சிதான் எனினும் ஆட்சியாளர்கள்தான் ஊழல்வாதிகள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டஇளைஞர்கள் சேவை மன்றத்தில் நேற்று நடைபெற்ற இளைஞர் கழக சம்மேளனக் காரியாலய திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆட்சியை இளைஞர்களின் ஒத்துழைப்புடன் நல்லாட்சியாக்கியானாலும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியாளர்கள் கடந்த அரசிலும் பல்வேறான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். எனினும், இளைஞர்களினால் அவ்வாறானவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இளைஞர்களது திறமைகள் ஒருபுறம் வெளிப்பட்டாலும் மறுபுறம் அவர்களைப் பிழையாக வழிநடத்திச் செல்லும் செய்திகளையே நாம் அதிகமாகக் காண்கின்றோம்.

உதாரணமா சமூக ஊடகங்களை இளைஞர்கள் கையாளும் விதங்கள் மிகவும் பயங்கரமானதும் கோழைத்தனமானதுமாக காணப்படுகின்றது. சிலர் பாலியல் ரீதியாகவும் சிலர் அரசியல் ரீதியாகவும் அடிமையாக்கப்பட்டுள்ளனர். எனினும், சிலரே நாட்டினதும் சமூகத்தினதும் அபிவிருத்தி தொடர்பாகவும் நல்ல விடயங்களுக்காகவும் இந்த ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் சில அரசியல்வாதிகளின் அடிமைகளாக போலி முகநூல்களை உருவாக்கி அவர்களுக்காக ஏனைய அரசியல்வாதிகளை விமர்சிக்கத் தொடங்குகின்றனர். உண்மையிலே அவ்வாறு செயற்படும் இளைஞர்களுக்கு தைரியம் இருந்தால் தங்களது சொந்த முகநூல்கள் மூலமாக விமர்சிக்க வேண்டும் அல்லது நேரில் சென்று இழைக்கும் தவறுகளைக் குறித்த அரசியல்வாதிகளிடம் சுட்டிக்காட்ட வேண்டும். இதுவே அரசில்வாதிகளை அணுகும் அல்லது தவறுகளை சுட்டிக்காட்டும் முறையாகும்.

அதை விடுத்து பணத்திற்கு விலை போகும் இளைஞர்களாக மாற்றமடைவது சாலச்சிறந்ததாக அமையாது.
தொழில்நுட்பமூடாக தங்களது திறமைகளை சரியான முறையில் வெளிக்கொணரும் இளைஞர்களுக்கு நிச்சயமாக சமூகத்தில் அங்கீகாரமும் அதற்கான பிரதிபலனும் கிடைக்கும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]