ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்ற முறைகேட்டை விசாரிக்க சுயாதீனக் குழு வேண்டும் – நஸீர் அஹமத்
ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்ற முறைகேட்டை விசாரிக்க சுயாதீனக் குழு வேண்டும். கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமத்
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் மூலம் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்குமாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை 13.13.2017 அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணத்தில் 3000 ஆயிரத்துக்கு நியமன வெற்றிடங்கள் நிலவுகின்ற வேளையில் 1441 பேருக்கான நியமனத்திற்கு அனுமதி இருந்தும் 1119 பேருக்கே அண்மையில் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் குறித்து பட்டதாரிகள் ஊடாக மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளன.
இதனை நோக்குமிடத்து குறித்த பட்டதாரி நியமனங்களின் போது அநீதிகள் மற்றும் குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதை உணர முடிகின்றது,
எனவே இதன் காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கும் ஆர்பாட்டங்களைப் புறந்தள்ளி விடமுடியாது.
இந்நிலையில் பட்டதாரி நியமனத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்க ஆளுநரினால் அவரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவானது குற்றஞ்சாட்டப்பட்டவரே குற்றத்தை விசாரிக்கை நீதிபதிக் குழாத்தை நியமிப்பதற்கு ஒப்பானதாகும்,
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அநீதிக்குள்ளாக்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் அதிருப்தியும் கோபமும் நல்லாட்சி மீதே திரும்பும் என்பதையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது, ஆகவே அதிமேதகு ஜனாதிபதியவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிக்க சுயாதீனக் குழுவொன்றை நியமிக்குமாறு கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சார்பில் கோரிக்கை விடுக்கின்றேன்,
அத்துடன் மாகாணத்தில் ஏற்கனவே மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கையில் பட்டதாரி நியமனப் பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேல் ஒரு சிலருக்கு மாத்திரம் நியமனங்களை வழங்குவது அநீதியானதாகும்.
எனவே குறித்த வெற்றிடங்களுக்கு 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து பட்டதாரிகளும் நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் அதன் பின்னர் ஏனைய பட்டதாரிகளும் மீதமுள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]