ஆசிரியை மீதும் பிரதி அதிபர் மீதும் தாக்குதல் தாலிக்கொடியும் பறிப்பு

பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியை மீதும் பாடசாலையின் பிரதி அதிபர் மீதும் சரமாரியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ஆசிரியை அணிந்திருந்த சுமார் 10 பவுண் தங்கத் தாலிக்கொடியும் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை காலை 21.09.2018 வழமைபோன்று மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது பாடசாலைக்கு மிக அருகில் வைத்து இறால்குழி கஜமுகா வித்தியாலய ஆசிரியை மீதும் அப்பாடசாலையின் பிரதி அதிபர் மீதுமே இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்திவிட்டு ஆசிரியை அணிந்திருந்த தாலிக்கொடியைப் பறித்துச் சென்றுள்ளனர்.

கத்தி வெட்டுக்கும் தடியடித் தாக்குதலுக்கும் உள்ளாகிய நிலையில் படுகாயமடைந்த ஆசிரியையும் பிரதி அதிபரும் உடனடியாக மீட்கப்பட்டு மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவசர பொலிஸ் தொடர்பு இலக்கமான 119 இற்கு அழைப்பு விடுத்து தகவல் சொல்லப்பட்டதின் பேரில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தடயங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவத்தைக் கேள்வியுற்றதும் கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராசா குறித்த பாடசாலைக்குச் சென்று நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளதோடு காயம்பட்டவர்களையும் பார்வiயிட்டுள்ளார்.

பணம், பொருளுக்காக ஆசிரியர்கள் மீது நடாத்தப்படும் இத்தகைய கொடூர வன்முறைகளைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]