ஆசிரியர் இடமாற்றம்- இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களுக்குரிய இடமாற்றக் கடிதங்கள் குறிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படாமை தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கை ஆசரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தொழில் சங்கங்கள் இடமாற்ற சபையில் இருந்தும் ஆசிரியர்களுக்கான பாடசாலைகள் அதிகாரிகளினால் தீர்மானிக்கப்படுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயரூபன் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

“கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக மாகாண கல்வித் திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்பாக மேன் முறையீடு செய்யுமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இடமாற்றங்கள் தொடர்பாக முறையான இடமாற்றங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டுகிறது.

தேசிய இடமாற்றக் கொள்கையின் பிரகாரம் கல்வி அமைச்சினால் 2007-20 சுற்றறிக்கையின் பிரகாரம் இடமாற்றத்துக்குட்பட்ட ஆசிரியர்களுக்கு முறையான இடமாற்றக் கடிதங்கள் வழங்கப்பட்டு அதிபரினூடாக மேன்முறையீடு செய்வதற்கான உரிமை உறுதிப்படுத்தபட்டுள்ளது.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிவிஷேட வர்த்தமானி 1589ஃ30 மற்றும் தாபன விதிக் கோவைகளுக்கு அமைவாக மேல்முறையீடு உறுதிப்படுத்தபட்டுள்ள நிலையில் இடமாற்றம் தொடர்பாக அதிபர்களுக்கான பிரதிகள் அனுப்பப்பட்டால் மாத்திரமே அதபர்களுடாக மேன்முறையீடு செய்ய முடியும்.

இதன் பிரகாரம் மேன்முறையீட்டுக்காக பதில் கிடைக்கும் வரை குறிக்கப்பட்ட ஆசிரியர் சேவையில் உள்ள பாடசாலையில் தொடர்ச்சியாக கடமையில் செயற்பட முடியும்.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களே இம்மாணத்தின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக உள்ளது.

ஆசிரியர் தொழில் சங்கங்கள் இடமாற்ற சபையில் இருந்தும் ஆசிரியர்களுக்கான பாடசாலைகள் அதிகாரிகளினால் தீர்மானிக்கப்பட்டுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆசிரியர்களுக்கான இடமாற்றம் வெளிப்படையாக தீர்மானிக்கப்பட்டுவதில்லை மாணவர்களின் கல்வி உரிமையும் தரமான கல்விக்கான ஆசிரியர்களின் மனிதவளங்களின் உச்ச பயன் கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளினால் வீண்விரயம் செய்யப்படுகிறது.

சட்டவிதிகளுக்கு முரணான செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் பலதடவை சுட்டிக்காட்டியும் கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகள் உதாசீனப்படுத்தியுள்ளனர். ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் தாமதியாது அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் செயற்திறனாக முன்னேடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]