ஆசிய பசுபிக் வனப்பரம்பல் ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை…..

sl presidentஆசிய பசுபிக் வனப்பரம்பல் ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தொடர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மிகவும் முக்கியமானதுடன் ஒட்டுமொத்த மானிட சமூகத்திற்கும் ஏனைய உயிரினங்களுக்கும் ஆற்றக்கூடிய மிகப்பெரிய பணிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிய பசுபிக் தொடரில் பங்குபற்றும் 34 நாடுகளுக்கும் மேலான பிரதிநிதிகளும், வனப்பாதுகாப்பு பற்றியும் சுற்றாடல் பாதுகாப்பு பற்றியும் அக்கறையுடன் செயற்படும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இலங்கை சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன்.

வனப்பாதுகாப்பு, வனங்களின் அடர்த்தி, வனஅழிவுகள், இயற்கை வளங்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பெறுமதி தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மக்களின் கவனம் தற்போது செலுத்தப்பட்டுள்ளது. வனப்பாதுகாப்பாளர் நாயகம் சதரசிங்க அவர்கள் 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாரிஸ் மாநாட்டில் நான் கலந்து கொண்டதாகக் கூறினார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சூழல் பாதுகாப்பு பற்றிய உடன்படிக்கையில் இலங்கையும் கைச்சாத்திட்டது. அதேபோல் இவ்வருடம் நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கூட்டத்தில் நான் முக்கியமாகக் குறிப்பிட்ட விடயம் பாரிஸ் உடன்படிக்கையை ஏற்படுத்த நாம் தயாராக உள்ளோம் என்பதாகும்.

அவற்றை நாம் முன்னெடுத்து செல்கிறோம். அதன் ஒரு பகுதியாகவே நீலப்பசுமை யுகம் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எமது தாய் நாட்டை பசுமையாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட இத்திட்டமும், வனரோபா மரநடுகைத் திட்டமும் சிறந்தவாறு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் அதனை அர்ப்பணிப்புடன் மேற்கொள்கிறோம்.

வனபாதுகாப்பு நடவடிக்கையில் தற்போது எமது முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினருக்கு தேவையான ஒத்துழைப்பினையும் பாதுகாப்பினையும் இவர்கள் வழங்குகின்றனர். எமது நாடு ஒரு தீவாகக் காணப்படுவதனால் கடல்மார்க்கமாக மரக்கடத்தல்களில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக சட்ட திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. கடற்படையினர் 24 மணிநேரமும் இதற்காகச் செயற்படுகிறார்கள்.

இதுபோன்ற காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. செய்மதிகளின் ஊடாக நாடு முழுவதும் கண்காணிக்கப்படுகின்றன. அவ்வாறே வாரத்திற்கொருமுறை விமானம் மூலம் சகல வனப்பிரதேசங்களும் கண்காணிக்கப்படுகின்றன. விமானப்படையினரும் இருவாரங்களுக்கு ஒருமுறை கண்காணிப்பு அறிக்கைகளை எனக்கு வழங்குகின்றனர். அவற்றின் அடிப்படையில் பொலிஸ் மற்றும் வனபாதுகாப்புத் திணைக்களத்துக்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

வனரோபா செயற்திட்டத்தில் அனைத்து மக்களும் பங்குபற்றக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 43,000 மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் சிறுவர்களுக்கு உற்சாகத்தை வழங்குவதற்காக நடப்படும் மரக்கன்றுகளுக்கு அந்தப் பிள்ளைகளின் பெயர்களை இடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தாவரத்தின் பொதுப் பெயர், விஞ்ஞான ரீதியான பெயர் மற்றும் தமது பெயரை இட்டு மரங்களை வளர்க்கும்போது சிறுவர்கள் மிகவும் ஆர்வத்தோடு இதில் ஈடுபடுவர். இவ்வாறான பல செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படுவதுடன் காடழிப்பு, கடத்தல்களுக்கு எதிராக தீவிர சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றுகின்றனர். உலக நாடுகளுக்கான நிதி உதவிகளை வழங்கும் சந்தர்ப்பத்தில் வனப்பாதுகாப்பு மற்றும் வனப்பரம்பல் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்படும் நாடுகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு நான் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இதன்மூலமாக வனப்பாதுகாப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படுமென நான் கருதுகிறேன்.

வனபாதுகாப்பு,சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விஞ்ஞானிகள், கல்விமான்கள் மற்றும் நிபுணர்களினதும் ஆய்வு நிறுவனங்களினதும் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் அவசியமாகும். மேலும் இவ்விடயங்களில் ஆர்வத்தோடு பங்களிப்புச் செய்யும் அரச நிறுவனங்களுக்கு விசேட சலுகைகளை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னொருபோதும் இல்லாதவாறு தற்போது காலநிலை, வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இயற்கை அனர்த்தங்களுக்கு உலக நாடுகள் முகங்கொடுத்துள்ளன. அவை காடழிப்பு மற்றும் சூழல் மாசடைதலின் பெறுபேறுகளேயாகும். பூகோள வெப்பமயமாதலின் காரணமாக சகல உயிரினங்களினதும் நிலவுகையும் சவாலுக்குள்ளாகி உள்ளது. எமது நாட்டிலும் ஒருபுறம் வறட்சியும் மறுபுறம் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதை நாம் அறிவோம். எட்டு இலட்சத்திற்கு அதிகமான குடும்பத்தினருக்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக அரச நிவாரணம் வழங்கப்படுகின்றது. எமது வலயத்திலுள்ள ஏனைய நாடுகளும் இதேநிலையையே எதிர்நோக்கியுள்ளன.

இலங்கையில் நீங்கள் கழிக்கவிருக்கும் சில தினங்களுக்குள் அமர்வின் நோக்கத்திற்கும் குறிக்கோள்களுக்கும் ஏற்றவாறு நிகழும் கலந்துரையாடல்களின் ஊடாக கருத்துக்களைப் பயனுள்ளவாறு பகிர்ந்துகொள்வீர்கள் என நான் கருதுகிறேன்.

உங்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவேற பிரார்த்தித்து விடைபெறுகிறேன்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]