அவுஸ்ரேலியாவின் இடைக்கால பிரதமராக ஸ்கொட் மொறிசன்

அவுஸ்ரேலியாவின் இடைக்கால பிரதமராக ஸ்கொட் மொறிசன் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்ரேலியாவில் எதிர்வருகிற 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதுவரை ஸ்கொட் மொறிசன் பிரதமராக பதவி வகிப்பார் என கூறப்படுகின்றது.

லிபரல் கட்சிக்குள் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையின் விளைவாக மெல்கம் டேர்ண்புல் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரே பிரதமராக திகழ முடியும் என்பதற்கு அமைவாக, ஆளும் கட்சியான லிபரல் கட்சியை சேர்ந்த மெல்கம் டேர்ண்புல் பிரதமராக பதவி வகித்து வந்தார்.

ஆனால், அண்மைக் காலமாக ஆளும் லிபரல் கட்சிக்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வந்ததுடன், டேர்ண்புல்லின் எரிசக்தி கொள்கைக்கு அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது.

அதன்படி அவரது கட்சி உறுப்பினர்கள் டேர்ண்புல் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வந்ததற்கமைய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதில் டேர்ண்புல் ஏழு வாக்குகளால் வெற்றியீட்டினார்.

குறித்த வாக்கெடுப்பில் டேர்ண்புல்லுக்கு ஆதரவாக வாக்களித்த மூன்று அமைச்சர்கள், தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து டேர்ண்புல்லுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன், இரண்டாவது வாக்கெடுப்பிற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நடத்தப்பட்ட இரண்டாவது வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

அதற்கமைய பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த முன்னாள் உள்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு இடையே தலைமைத்துவ வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

தலைமைத்துவ வாக்கெடுப்பில் நிதியமைச்சர் ஸ்கொட் மொறிசன் அதிக வாக்குகளை பெற்ற நிலையில், புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக கட்சி அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]universaltamil.com