அவரின் மனசாட்சிக்குத் தெரியும்! – மீனாட்சி கண்ணீர்

என் மகன்தான் தனுஷ் என்பது அவரின் மனசாட்சிக்குத் தெரியும்’ என்று, மகன் என உரிமை கோரிய மீனாட்சி, நீதிமன்ற வளாகத்தில் கண்ணீருடன் கூறினார்.

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், ‘நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்புத் தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த நிலையில், கதிரேசன்- மீனாட்சி தம்பதியின் மனுவைத் தள்ளுபடிசெய்யக் கோரி, நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை. எனவே, இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, இரு தரப்பினரும் தனுஷின் பள்ளி அசல் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தனுஷின் பள்ளி மாற்றுச் சான்றிதழை இரு தரப்பினரும் தாக்கல்செய்தனர். தனுஷ் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மாற்றுச் சான்றிதழில், அவருடைய உடலில் உள்ள அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால், மேலூர் தம்பதி தாக்கல்செய்துள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள், தனுஷ் உடலில் உள்ளதா எனக் கண்டறிந்து, அது தொடர்பாக அறிக்கை தாக்கல்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தனுஷ் அங்க அடையாளங்களை மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சரிபார்த்தனர். இதையடுத்து, பரிசோதனை அறிக்கையை டாக்டர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், கதிரேசன்-மீனாட்சி தம்பதியரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைக் கேட்டு கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் கண்ணீர்விட்டு அழுதனர்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ‘மனது கஷ்டமாகத்தான் இருக்கிறது. தீர்ப்பு இப்படி ஆகுமென நினைக்கவேயில்லை. பணம் ஜெயித்துவிட்டது. என் மகன்தான் தனுஷ் என்பது அவரின் மனசாட்சிக்குத் தெரியும். தனுஷ்தான் எங்கள் மகன். அதற்கான அங்க அடையாளங்களைச் சமர்ப்பித்து இருந்தோம். இந்த உண்மை தனுஷுக்குத் தெரியும். தனுஷுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தக் கோரிக்கை வைத்தோம். தனுஷின் பிறப்புச் சான்றிதழ் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பணக்காரனுக்கு ஒரு தீர்ப்பு ஏழைக்கு ஒரு தீர்ப்பா. இறைவன் இருக்கிறார். நீதி ஒருநாள் வெல்லும். கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம்’ என்று கூறினர்.

‘இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது’ என்று தனுஷ் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.