அவசரப்படுத்தும் சீனா – இழுத்தடிக்கும் இலங்கை

சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு, இலங்கைக்கு நீண்ட காலஅவகாசம் தேவைப்படுகிறது என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் நேற்று ரொய்ட்டர்ஸ் செய்தியாளருக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிய நாடான இலங்கை விரைவான உடன்பாட்டினால் ஏற்படக் கூடிய பொருளாதார தாக்கங்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளது. எனவே, சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு அவசரப்பட முடியாது.

இந்த செயல்முறைக்கு சிறிது காலத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். சீனா வேகமாக அதனைச் செய்து கொள்ள விரும்புகிறது. ஏனென்றால், இலங்கை மிகச் சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு. நாங்கள் பங்குதாரர்களிடம் இருந்து ஒருமித்த கருத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே, இந்த உடன்பாட்டில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆனால் நாங்கள் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவோம்.

சீன நிறுவனங்கள் அதில் ஆர்வம் காட்டியதும் எனக்குத் தெரியும். ஆனால், எமது ஆய்வுகளின்படி, அவர்கள் சாத்தியமான பொருளாதாரத் திட்டத்தை கொண்டிருக்கவில்லை.

அதனால் தான், இந்தியாவுக்கு வாய்ப்பைக் கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இன்னமும் அது இறுதிப்படுத்தப்படவில்லை.

மத்தல விமான நிலையத்துக்கு சாத்தியமான பொருளாதாரத் திட்டத்துடன் எவரும் முன்வரலாம். அவர்களை வரவேற்கிறோம். ஆனால் துரதிஷ்டவசமாக அதனை யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]