அற்ப அரசியலுக்காக அவதூறு கூறுபவர்களைப்பற்றி அஞ்சப் போவதில்லை – நஸீர் அஹமத்

அற்ப அரசியலுக்காக அவதூறு கூறுபவர்களைப்பற்றி அஞ்சப் போவதில்லை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத்

நஸீர் அஹமத்

அற்ப அரசியலுக்காக இல்லாதது பொல்லாததையெல்லாம் இட்டுக்கட்டி அவதூறு பேசித் திரிபவர்களைப்பற்றி தான் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் தமிழ் மாணவர்கள் சுமார் 5000 பேருக்கு பாடசாலைப் புத்தகப்பை, எழுது கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிகழ்வின் 4ஆம் கட்டத்தை ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றினார்.

ஏறாவூர் அல்ஜுப்ரியா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத்; இந்தப் பகுதியிலே கோலோச்சிய சிலர் தங்களை முறியடிக்க வேறு யாரும் இல்லை என்றுதான் எண்ணிக் கொண்டு இதுவரை காலமும் மக்களை ஏமாற்றி தங்களது சுயலாப அரசியலை அரங்கேற்றி வந்திருக்கின்றார்கள்.

இந்தப் பிரதேசத்திலிருந்து ஏழைப் பெண்கள் தங்களது வறுமை காரணமாக வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் சென்று கஸ்டப்படுவதை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள். மற்றும் ஏனைய எத்தனையோ சமூகத் தேவைளைக் கவனத்திற் கொள்ளாமல் இருந்தவர்கள் இப்பொழுது மக்களிடம் செல்லாக்காசாகி விட்டிருப்பதால் விழித்துக் கொண்டுள்ளார்கள் போலும்.

இவர்களால் இந்தப் பிரதேசத்தின் மறுமலர்ச்சிக்காக என்னதான் சாதிக்கப்பட்டிருக்கின்றது.

அவர்களது ஏமாற்று வித்தைகளால் மக்கள் ஏமார்ந்து போனதுதான் மிச்சமாகவுள்ளது.

அவர்களால் இந்தப் பிரதேசத்தில் ஒரு தொழிற்சாலையையேனும் கடந்த 30 வருட காலத்தில் அமைக்க முடிந்திருந்தால் வறுமைக்குட்பட்ட ஒரு பெண்ணோ ஆணோ மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று சிரமப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

காலாகாலமாக மக்களை ஏமாற்றுகின்ற அரசியலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துக் காட்டியபோது இப்பொழுது எதிர்ப்புத் தெரிவிக்க வேறு வழியில்லாமல் என் மீது அவதூறு கூறுகின்றார்கள்.

30 மாத எமது கிழக்கு மாகாண சபை ஆட்சிக் காலத்தில் எனது சொந்த முயற்சியில் 3 தொழிற்சாலைகளை ஏறாவூரில் நிறுவ முடிந்திருக்கின்றது.

அதனால் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சுமார் 2000 பேர் வேலை வாய்ப்பைப் பெற முடிந்திருக்கின்றது.

எனது அடுத்த கட்ட முயற்சியாக மேலும் 1500 பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் பாரிய தொழிற் பேட்டை மிக விரைவில் புன்னைக்குடாவில் அமையும்.

இதனை எல்லாம் சகித்துக் கொள்ள முடியாத ஏமாற்று அரசியல்வாதிகள் அழுது புலம்பி மக்களிடம் மீண்டும் ஆதரவைப் பெற முயற்சிக்கின்றார்கள்.

எவ்வாறாயினும், தங்களது சுய நலனுக்காக மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளை மக்கள் புறந்தள்ளுவார்கள் என்பதை காலம் விரைவில் உணர்த்தி நிற்கும். அப்போது இவர்கள் கைசேதப்பட்டு நிற்பார்கள்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]