அரபி கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை சூறாவளியாக மாறும் சாத்தியம்

அரபி கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை சூறாவளியாக மாறும் சாத்தியம்

அரபி கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை சூறாவளியாக மாற்றமடையும் சாத்திய கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றமானது, எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மேலும்  வலுவடைக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(சனிக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தாழமுக்க நிலை வடமேல் திசையாக ஓமானை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்தவகையில், மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடும் மழையுடனான வானிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரித்து வீசும் சாத்தியம் காணப்படுவதாகவும் களுத்துறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோர பகுதிகளில் அலையின் சீற்றம் 2 முதல் 2.5 மீற்றர் வரை உயருவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே கடல்சார் தொழில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் மின்னல் போன்ற காலநிலையால் வரும் ஆபத்துக்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]