அரசியல் நெருக்கடியைத் தவிர்க்க விஜேதாஸ தானாக பதவி விலகுவாரா?

இலங்கை அரசியலை புரட்டிப்போட்ட சம்பவங்கள் பல கடந்த ஒரு வாரத்துக்குள் நடந்துமுடிந்திருந்தன. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பதவி விலகல், நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மீது அவரின் கட்சியே முன்வைத்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் என்பன மிக முக்கிய விடயங்களாக இலங்கை அரசியலில் பேசப்பட்டன.

குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இத்தகைய நெருக்கடி நிலைமை தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனரா எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருந்ததைக் காணமுடிந்தது. எனவே, இச்சந்தேகத்தின் நியாயங்கள் எத்தகையன, விஜயதாஸ மீது தற்போதைய நெருக்கை திருப்பப்பட்டதற்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்கள் எத்தகையன, இதற்குள் சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் கலந்திருக்கின்றனவா போன்ற விடயங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராயவேண்டிய சூழல் எழுந்திருக்கின்றது

நல்லாட்சி அரசென்ற பெயரில் தேசிய அரசு பதவிக்கதிரையில் அமர்ந்து இரண்டு வருடங்களைக் கடக்கின்ற இப்போதைய காலப்பகுதியின் அதன் பயணங்கள் எப்போதும் சவால் மிகுந்த பயணமாக அமைந்தன. ஒருபக்கத்தில் 100 நாள் வேலைத்திட்டம், மறுபக்கத்தில் நல்லாட்சி வேடம், சர்வதேச அரசியல் நெருக்கடி, தேசிய அரசின் ஒற்றுமையைப் பேணுவதில் காணப்பட்ட சில நெருக்கடிகள் என அது பாரிய சுமையொன்றையே தோளில் சுமந்துவந்தது.

மறுபக்கத்தில் பொது எதிரணியால் மேற்கொள்ளப்பட்ட சில நெருக்கீடுகளையும் அதனால் அரசுக்கு ஏற்பட்ட தலையிடிகளையும் ஒரு பட்டியலில் அடக்கிவிடமுடியாது. மறுபக்கத்தில் அரசில் அங்கம் வகித்த சில அமைச்சர்களின் ஆளுமையின்மைகள் நல்லாட்சி அரசுக்குள்ளே காணப்பட்ட சில கறுப்பாடுகளை இனங்காண்பதில் காணப்பட்ட சில பிரச்சினைகள், இனங்கண்டாலும் தேசிய அரசைப் பாதுகாத்து அதன் ஒற்றுமையைக் காத்துக்கொண்டு அவர்களை வெளியேற்றுவதில் காணப்பட்ட தடைகள் என அதன் நெருக்கடிப்போக்கை நீட்டிக்கொண்டே செல்லமுடியும்.

தற்போது நெருக்கடியில் சிக்கியிருக்கும் விஜயதாஸ ராஜபக்ஷவை பொறுத்தவரையில் இந்த நல்லாட்சி அரசை அமைப்பதில் அவரின் பங்கு அளப்பரியது. வெளிப்படையில் மஹிந்தவின் முகத்துக்கு நேர் சில ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டு நல்லாட்சி அரசுடன் கைகோத்து அதன் வெற்றிக்கு வழிவகுத்ததில் விஜயதாஸ ராஜபக்ஷவின் பங்கும் குறிப்பிடத்தக்கன. இந்நிலையில், சிறந்த சட்ட நிபுணத்துவம்கொண்ட ஒருவரை நீதியமைச்சர் பதவிக்காக தேடியபோது நல்லாட்சியின் கண்களில் பட்ட தலைவராக விஜயதாஸவே இருந்தார். இந்நிலையிலேயே விஜயதாஸ நீதியமைச்சராக உட்கார வைக்கப்பட்டார். ஆனால், செயற்பாட்டு ரீதியில் இவரின் செயற்பாடு நல்லாட்சி அரசை பாதுகாப்பதோடு மாத்திரம் நின்றுவிடாது மறைமுகமாக முன்னாள் ஆட்சியாளர்களையும் இவர் பாதுகாக்க முற்படுகின்றாரோ என்ற சந்தேகங்கள் இவரின் மீதும் இவர்சார்ந்த அமைச்சரவை மீதும் விழுந்தன.

குறிப்பாக, முன்னாள் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் அவன்கார்ட் மோசடி தொடர்பான வழக்கில் காட்டப்படும் தீவிரத்தன்மையோடு ஒப்பிடும்போது பிணைமுறி தொடர்பான விசாரணைகளின் தீவிரம் பல சந்தேகங்களை கடந்த காலங்களில் ஏற்படுத்தியது. இந்த நிலைமை கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊழல், மோசடி குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக முன்னெடுப்பதில் இவரே தடையாக இருந்ததான குற்றச்சாட்டுகள் எழக் காரணமாகின.

அத்துடன், இவர் மஹிந்த என்ற தனிமனிதரை எதிர்த்தே காய்களை நகர்த்தியதோடு ஏனைய அவரின் சகாக்களான முன்னாள் ஆட்சியாளர்கள் கோட்டாபய உட்பட சிலர் மீது விசாரணைக்குழுக்களின் பார்வை திரும்பாதவரையில் இவர் பார்த்துக்கொண்டதான சந்தேகங்கள் கடந்த காலங்களில் தீவிரமாக முன்வைக்கப்பட்டன. இதனாலேயே இவரின் சில செயற்பாடுகள் கடந்த காலங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டன.

சட்டமா அதிபர் திணைக்களம் கடந்த காலங்களில் மேற்கொண்ட சில வழக்குகளின் தீவிரத்தன்மை காட்டப்பட்டதற்கும் இவரே காரணம் என்ற கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டன. தீவிரமாக நடந்தே றிவரும் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணையில் முன்னாள் நிதியமைச்சர் சிக்கி அவரே அதில் பலிக்கடாவாகவும் ஆக்கப்பட்டார். திட்டமிட்டு பின்னப்பட்ட அரசியல் சதிவலைக்குள் தேசிய அரசின் நிதியமைச்சர் வீழ்த்தப்பட்டார்.

இந்நிலையில், தேசிய அரசில் ஏற்படவிருந்த அரசியல் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக நிதியமைச்சர் பதவி விலகவேண்டிய சூழல் தவிர்க்கமுடியாது ஏற்பட்டது. ஆனால், அவன்கார்ட் மோசடி உட்பட சில வழக்குகளில் முன்னாள் ஆட்சியாளர்கள் தப்பிவந்ததான கருத்துகள் தேசிய அரசின் அங்கத்தவர்களால் முன்வைக்கப்பட்டதோடு அதற்கான பெரும்பாலான சுட்டு விரல்கள் விஜயதாஸ ராஜபக்ஷ மீதும் அவரின் அமைச்சு மீதும் திரும்பின.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் முன்னாள் ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டாலும் குறித்த நீதியமைச்சரின் தலையீடும் இந்த விடயத்தில் இருப்பதாக தேசிய அரசின் அங்கத்தவர்களாலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட சூழ்நிலையை இவரின் செயற்பாடுகள் ஏற்படுத்தின.

விஜயதாஸ ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரையில் நீதிமன்ற வழக்குகளில் காட்டப்படும் தாமதத்தன்மை ஊழல், மோசடிகளுக்கெதிரான சட்டமூலங்கள் எதையும் முன்வைக்காமை, இதன்மூலமாக ஊழலுக்கெதிரான நடவடிக்கைகளில் தீவிரத்தன்மையைக் காட்டாமை, கடந்த ஆட்சியாளர்கள் மீதான நெருக்கடி நிலைமையை அதிகளவில் ஏற்படுத்தாமை என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளின் தன்மைகள் குறித்து ஆராயும்போது நீதியமைச்சரின் சில செயற்பாடுகளை வைத்து உள்ளூர் அரசியலையும், சர்வதேச அரசியலையும் எதிர்கொள்ள நீதியமைச்சர் பலிக்கடாவாக்கப்படுகின்றாரா என்ற இயல்பான சந்தேகமும் இங்கே எழத் தவறவில்லை. இலங்கையின் நீதிமன்றங்களில் காட்டப்படும் தாமதத்துக்கான காரணமாக நீதியமைச்சர்தான் காரணம் கூறினால் அதை போல தவறான கருத்து எதுவும் இருந்துவிடமுடியாது.

இத்தகைய தீர்ப்புகளுக்கான காரணம், யாப்பியல் ரீதியிலும் சட்டவியல் ரீதியிலும் கட்டமைப்பியல் ரீதியிலும் காணப்படும் பலவீனங்களே இதற்குக் காரணமாக அமையமுடியும். இந்தக் கட்டமைப்புகள் மாற்றப்பட்டு இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு சுயாதீனமாகவும் வலுவேறாக்கத் தன்மையுடனும் இயங்கவைக்கப்பட்டாலே துரிதமான நீதி சாத்தியமாகும். நிலைமாறு கால நீதிப்பொறிமுறையை உருவாக்க இலங்கையின் அரசமைப்பு இடம்கொடுக்காத தன்மை இன்றுவரை உணரப்படுகின்றது. இதற்கான குற்றச்சாட்டுப் பத்திரங்களை அமைச்சர் மீது சுமத்துவது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் வினைத்திறனின்மை, இலங்கை அதிகாரம் யாப்பியல் ரீதியாக பாதுகாக்கப்பட்டிருக்கும் தன்மை ஆகியனவே நீதி தாமதிக்கப்படுவதற்கான காரணமாக எடுத்துக்கொள்ளமுடியும். இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பின் மீதான சர்வதேச ரீதியிலான விமர்சனத்துக்கு இந்தக் கட்டமைப்பியலில் காணப்பட்ட ஒழுங்கீனமே காரணமாக கொள்ளமுடியும். கடந்த மனித உரிமை கூட்டத்தொடரிலும் இது தொடர்பான விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபோதிலும், நீதிமுறைமையில் இன்னமும் மிகவும் ஆழமான காயங்களைக் காணமுடிகிறது. மறுசீரமைப்புக்கான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆயுத மோதல்களின்போது நீதித்துறை மோசமான நிலையில் இருந்ததைக் காணமுடிகிறது.
தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலைமை பரந்துபட்டளவில் உள்ளது. இது ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்கிறதென நீதித்துறை சுயாதீனத்தன்மை குறித்த விசேட அறிக்கையாளர் டியேகோ கார்சியா சயன் தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை சரியாக எதிர்கொண்டு பதிலளிப்பதில் நீதியமைச்சர் தவறியிருந்தாலும் அதற்குரிய முழுப்பொறுப்பையும் அவர் மீது சுமத்திவிடுவது என்பதும் அதனை வைத்து அவர் மீது அவரின் கட்சியே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைப்பதும் நீதியமைச்சரை சர்வதேச அரசியலுக்காக பலிக்கடாவாக்கும் செயலாக எடுத்துக்கொள்ளமுடியும்.

அத்துடன், தற்போதய பலிக்கடா பதவிக்கு விஜயதாஸ ஏன் தெரிவுசெய்யப்பட்டார் என்ற கேள்விக்கான விடைகள் அம்பாந்தோட்டை ஒப்பந்தம் ஊடான விமர்சனத்திலிருந்தே ஆரம்பமானது எனவும் ஊகிக்க முடிந்தாலும் தற்போதய சூழ்னிலையில் இந்த நடவடிக்கைகள் நீண்ட அரசியல் பிண்ணனி வியூகமாகவும் எடுத்துக்கொள்ள முடிகின்றது. குறிப்பாக, கடந்த காலத்தில் நல்லாட்சி அரசு சர்வதேச பார்வையை இலங்கை மீது திருப்பிவந்தது. இதற்காக கடந்த அரசோடு தொடர்பை இப்போதும் பேணுபவராக தனது அமைச்சின் செயற்பாடுகள் ஊடாக காட்டிவரும் விஜயதாஸவை தெரிவுசெய்து அவரை அரசியல் பலியிட்டு தனது கொள்கைகளையும் சர்வதேச நல்ல பிள்ளைத்தனத்தையும் அது பேண முற்படுகின்றது என்ற சந்தேகமும் அரசு மீது எழுகின்றது.

தற்போதய அரசியலில் அதிகம் உச்சரிக்கப்படும் மஹிந்த அரசின் ஊழலை தனியாக விசாரிக்க விசேட நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும் என்ற குரலை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே முதலில் முன்வைத்தார். அவரின் பின்னர் அது தொடர்பில் அமைச்சர் ராஜித கருத்து தெரிவித்திருந்தார். விசேட நீதிபதிகள் ஊடாக நீதாய விளக்கம் ரயல் அட்பார் முறையின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட சாத்தியமிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், அது அவரின் தனிப்பட்ட கருத்து.

விசேட நீதிமன்றமொன்று வராது. அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு அல்ல. அது அமைச்சர் ராஜிதவின் கருத்து என தொடர்ந்தும் முரண்பட்ட கருத்துகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் அரசின் ஒட்டுமொத்த பலவீனத்துக்கு அடுத்த பலிக்கடாவாக விஜயதாஸ தெரிவுசெய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுகின்றது. பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரோ, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உட்பட பலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் முடிய தெரிவித்த கருத்துகள் ஊடாக பல சந்தேகங்கள் எழுகின்றன. எனவே, இனிவரும் நாட்களில் பல்வேறு அரசியல்சார் நெருக்கடிகளை தேசிய அரசு சந்திக்கவிருப்பதற்கான சமிக்ஞையாக இருக்கமுடியும். இதேவேளை, பலிகடாவாக்கப்பட்ட விஜயதாஸ தானாக பதவி விலகி நல்லாட்சி அரசு மீது விழுந்திருக்கும் அரசியல் நெருக்கடியைத் தவிர்க்கவேண்டிய சூழலும் ரவி மீது சுமத்தப்பட்டதுபோல இவர் மீது சுமத்தப்படுமா? எதிர்வரும் நாட்கள் அதனை முடிவுசெய்யும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]