அரசியல் தீர்வு வருமா…? வருமா…?என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பு பார்த்துக்கொண்டிருக்கின்றது

தமிழ்மக்களுக்கு அரசியல்தீர்வு கிடைக்கும் வரை தமிழ்தேசிய கூட்டமைப்பு காத்திருக்க வேண்டாம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் நான் தெளிவாக சொல்லியிருக்கின்றேன். இயன்றளவு அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய அபிவிருத்திகளையும், வளப்பங்கீட்டுகளையும் தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதுதான் சமத்துவமான சமிக்ஞை ஆகும் என தேசிய சகவாழ்வு ,கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழி அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கல்லடி விவேகானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று(9.7.2018) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அதிபர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் :-
எமது அமைச்சில் தேசிய நல்லிணக்கம் ,ஒருமைப்பாடு,தேசிய நல்லிணக்க அரச கருமமொழிகள் என முக்கிய பகுதிகள் இருக்கின்றது.எமது அமைச்சானது இலங்கையின் காலநிலை போன்றதாகும்.ஏனென்றால் எப்போது மழை வரும்,வெயிலடிக்கும் என்று தெரியாது.அதேபோன்று எப்போது வெள்ளம் வரும்,வரட்சி வரும் என்று தெரியாது.இலங்கையின் காலநிலை திடீர் திடீர் என்று மாற்றம் கண்டுள்ளது.அதேபோன்றுதான் அரசியலிலும் மாற்றங்கள் நிலவுகின்றது.

அரசியல் மாற்றங்கள் பெற்றோலின் விலை மாற்றங்கள் போன்றது.காலையில் விலையை கூட்டுவோம்.பகலில் விலையை குறைப்போம்.மாலையில் விலையை கூட்டுவோம்.எரிபொருள்களின் விலை மாற்றம்போல அரசியல் தீர்வுகளும் மாறிக்கொண்டு செல்கின்றது.ஆரம்பத்தில் தேசிய நல்லிணக்க அமைச்சாக எனக்கு தந்தார்கள்.அதனையும் நான் ஏற்றுக்கொண்டேன்.அதன்பின்பு தேசிய ஒருமைப்பாடு அமைச்சாக நியமித்தார்கள்.அதனையும் நான் ஏற்றுக்கொண்டேன்.அதன்பின்னர் தேசிய சகவாழ்வு,நல்லிணக்க அரசகருமமொழிகள் அமைச்சராக என்னை நியமித்தார்கள்.அதனையும் நான் ஏற்றுக்கொண்டேன்.அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தலாம்.ஆனால் மனோ கணேசன் மாறவில்லை.மாறவும் மாட்டேன்.

வடகிழக்கில் உள்ள தமிழ்மக்கள் வாக்களித்துத்தான் ஜனாதிபதியையும்,பிரதமரையும் நல்லாட்சி அரசாங்கத்தில் வைத்திருக்கின்றீர்கள்.வாக்குச்சீட்டை வைத்துதான் அரசியல்வாதி உருவாகின்றார்கள்.வாக்களித்த மக்களை மறந்து வாழக்கூடிய சூழ்நிலைதான் இன்று காணப்படுகின்றது.வடகிழக்கில் வளப்பங்கீடுகளுடன் கூடிய அபிவிருத்தியை தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதுதான் அரசியல்வாதியின் சமத்துவமாகும்.

அரசியல் தீர்வு வருமா…? வருமா…?என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பு பார்த்துக்கொண்டிருக்கின்றது.வரும்.. ஆனால் வராது…. என்றநிலையில்தான் செயற்படுகின்றது அரசு.புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவேண்டும். அரசியல்தீர்வு கிடைக்கும்வரை தமிழ்தேசிய கூட்டமைப்போ,தமிழ்மக்களோ காத்திருக்க வேண்டாம்.இதனை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் எடுத்துக் கூறியுள்ளேன்.

யுத்தம் முடிந்து 9வருடங்கள் கடந்துள்ளநிலையில் தமிழ்மக்களின் உரிமைகளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.இலங்கையில் சகோதர சிங்கள,முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துடன் கேட்டுப் பெற்றெடுக்கும் வளப்பங்கீடுகளையும்,அபிவிருத்திகளையும் பெற்றுக்கொள்வதுபோல் தமிழ்மக்களும் பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஒரு இனத்திற்குரிய உரிமைகள் அந்த இனத்துக்கே உரித்தானதாகும்.அதேபோன்றுதான் தமிழ்மக்களுக்குரிய உரிமையை கேட்டு வாங்கிக்கொள்ளவேண்டும்.அல்லது பெற்றுக்கொள்ள வேண்டும்.ஒரு இனத்துக்குரிய உரிமையை தடுப்பதை அனுமதிக்கமாட்டேன்.புதிய அரசியல் மாற்றம் உருவாக்கப்படவேண்டும்.புதிய அரசியல் உருவாக்கம் தனிநாடு கோரிக்கை அல்ல.ஒரே நாடு என்பதாகும்.ஒரே நாட்டிக்குள் ஐக்கியம் உருவாக்கப்படவேண்டும்.ஐக்கியம் உருவாக்கத்தில் சமத்துவம் இனங்களுக்கிடையில் மலரவேண்டும் எனத்தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]