அரசியல் கைதி ஆனந்தசுதாகரை விடுவிக்குமாறு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகர் என்ற அரசியல் கைதி, 2008ஆம் ஆண்டு தொடக்கம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி, ஆனந்தசுதாகரின் மனைவி யோகாராணி நோயினால் மரணமானார். இதனால், அவர்களின் இரு பிள்ளைகளும் தாயையும் இழந்து, தந்தையின் அரவணைப்பையும் பெற முடியாத நிலையில் உள்ளனர்.

இந்தநிலையில், தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு, ஆனந்த சுதாகரின் இரு குழந்தைகளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தனர்.

இதையடுத்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இதுதொடர்பான கடிதம் ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார்.

இதேவேளை, ஆனந்தசுதாகருக்கு, பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு ஜனாதிபதியி்டம் கோரும் கருணை மனுவில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் கிளிநொச்சியில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]