கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் விசாரணையின்றி சிறைவாசம் அனுவவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்ததைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் இன்று (23) திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 

மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர்.

அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீதி வேண்டும் தமிழன் நீண்டு வாழ, இத்தனை வருடம் சிறையில் இருந்தும் இரக்கம் வரவில்லையா, நாமத்தில் மட்டும் நல்லாட்சியா, அரசியல் கைதிகளின் உரிமையைப் பெற்றுக்கொடு, நிபந்தனையின்றி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடு நியாயமானதா, அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில் -வவுனியால் இருந்த தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துத் தமிழ் அரசியற் கைதிகள் மூவரும் உண்ணா விரதத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். சிங்கள பிரதேசங்களில் உண்ணாவிரதங்கள் நடைபெறும் போது அவர்களுக்கு சாதகமான தீர்வினை வழங்கும் அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் பாராமுகமாக செயற்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக அரசாங்கம் விரைவாக செயற்பட்டு அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். தமிழ் மக்கள் பெருந்திரளாக வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் ஆனால் அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறையின்றி செயற்படுகிறது.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தனர்.