அரசியல் கைதிகளின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றக் கோரி புதிய ஜனநாயக மாக்சிச லெனினசக் கட்சி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றக் கோரி புதிய ஜனநாயக மாக்சிச லெனினசக் கட்சி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

தமது வழக்குகளை அனுராதபுரத்தில் இருந்து மீளவும் வவுனியாவுக்கு மாற்றக் கோரி 25 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக ”உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே!”, ” அவர்களின் வழக்குகளை அனுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்று!”, ”அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பில் விடுதலை செய்!” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 24.10.2017 செவ்வாய்க் கிழமை அன்று மு.ப 10 மணியளவில் யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னால் புதிய ஜனநாயக மாக்சிச லெனினசக் கட்சியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக அக் கட்சியின் வடபிராந்திய செயலாளர் தோழர் செல்வம் கதிர்காமநாதன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வாழ்வின் விளிம்பில், தமது கோரிக்கைகளை வெளிப்படுத்த வேறு வழிகள் எதுவுமற்ற நிலையில், தமது உயிரைப் பணயம் வைத்து, அரசியல் கைதிகளாக இருக்கின்ற எமது உறவுகள் 25 நாட்களையும் கடந்து போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், நாம் இவர்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதற்காகக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு வகையான போராட்டங்களையும் ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுத்து வந்துள்ளோம். ஆனாலும் அரசாங்கம் இதுவரை இப் பிரச்சினைக்குச் சரியானதொரு பதிலைச் சொல்லாமல், ஏனைய மக்கள் போராட்டங்களில் நடந்துகொள்வதுபோல் இழுத்தடிப்புகளை மேற்கொண்டு வருகின்றமை மிகவும் மனவருத்தத்திற்கு உரியது.

எனவே, இனியும் இத்தகைய இழுத்தடிப்பைத் தொடர்வதன் மூலம் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிரோடு விளையாடாமல் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறித்தி எம்மால் இக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதில் அனைவரையும் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஜனாதிபதி இன்று உறுதி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]