அரசியல் குழப்ப நிலையை சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு, பயனடையும் நோக்கம் தனக்கில்லை என்கிறார் சஜித் பிரேமதாச

பிரதமராக பதவியேற்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னிடம் கேட்டுக்கொண்டார் எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச, அரசியல் குழப்ப நிலையை சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு, பயனடையும் நோக்கம் தனக்கில்லை என்றும் தெரிவித்தார்.

“ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் இரு முறைகள் பற்றி மகாத்மா காந்தி கூறியுள்ளார். அடக்குமுறை, சமாதானமான முறை என்பனவே அவையாகும். அவற்றில் ஒன்றான மக்கள் நம்பிக்கையைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதே சிறந்தது” என்றார்.

அலரி மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவித்த போது,

“விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டி சமாதானமான முறையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால், நாட்டு மக்களின் உரிமைகளும், இறைமையும் தொடர்ச்சியாக மீறப்படும். எனவே, சகலரும் ஒற்றுமையாக செயற்பட்டு நாட்டின் நற்பெயரை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியிடமிருந்து எனக்கு அழைப்புக் ​கிடைத்தது. ஓர் உடன்படிக்கையின் கீழ் அதிகாரத்துக்கு வந்துள்ளோம். நல்லாட்சியை செயற்படுத்துவதே, 365 நாள்களும் என்னிடமிருந்த நோக்கம், ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒன்றாக இணைத்துக்கொண்டு முன்னோக்கிப் பயணிப்பதாகும்.

பிரச்சினைகள் இருந்தன. அதனைப் பயன்படுத்தி இலாபம் தேடிக்கொள்ள முயலவில்லை. கொள்கைக்கு மதிப்பளிப்பது நோக்கத்தின் முதலாவது முக்கியமானதாகும். எங்களிடத்தில் ஒழுக்கநெறியொன்று இருக்கவேண்டும்.

எனது கட்சிக்கு தலைவரொருவர் இருக்கும் போது, பதவிகள், சலுகைகளை பெறுவதல்ல என்னுடைய நோக்கமாக இருந்தது. தலைவர்கள் இருவரிடத்திலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதனைப் பலப்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்பான அபிவிருத்தியை செயற்படுத்துவதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்” என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் மோதுவதற்கு அஞ்சுகிறீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது,

“நீங்கள் புத்திசாலித்தனமாக இதை கேட்கவில்லை. நான் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கிறேன். தலைவருடன் மோதுவதல்ல எனது நோக்கம். வறுமை, ஊழல் போன்றவற்றுடன் மோதுவதே எனது நோக்கம். சவால்களைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு நான் ஒருபோதும் அஞ்சவில்லை, அஞ்சவும் மாட்டேன். எல்லாவற்றிலும் கொள்கைக்கு கௌரவமளிக்கவேண்டும்.

நான் மட்டுமல்ல கரு ஜயசூரியவும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தார். நான், எடுத்த நிலைப்பாடு சரியானது. என்னுடைய நிலைப்பாட்டில் முன்னோக்கிச் செல்வதற்கு, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றேன்.

26ம் திகதி ஜனாதிபதி எடுத்த முடிவு தவறானது. ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காத தீர்மானம் அது“ என்றும் அவர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]