அரசியலுக்கு வந்தவுடன் தங்களை மிஞ்ச யாரும் இல்லை என்று சிலர் நினைக்கின்றார்கள் – சோ. கணேசமூர்த்தி

அரசியலுக்கு வந்தவுடன் தங்களை மிஞ்ச யாரும் இல்லை என்று சிலர் நினைக்கின்றார்கள். இனவாதம் பேசி இன்னும் அரசியலில் தன்னை தக்கவைக்கலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் நினைக்கின்றார் என்று முன்னாள் பிரதி அமைச்சரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமாகிய சோ. கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு – தும்பங்கேணியில் நேற்று மாலை நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சிப்பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரசியலுக்கு வந்தவுடன் தங்களை மிஞ்ச யாரும் இல்லை என்று சிலர் நினைக்கின்றார்கள். இனவாதம் பேசி இன்னும் அரசியலில் தன்னை தக்கவைக்கலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் நினைக்கின்றார்.

இவர் கடந்த மூன்று வருடகாலமாக செய்த தாரக மந்திரம் இரண்டுதான் ஒன்று முஸ்லிம் பற்றிப் பேசுவது மற்றது சிங்களப் பேரினவாதம் பற்றிபோசுவது. இவர் நாடாளுமன்றம் தெரிவானது வெறுமனே இவரின் விருப்பத்தின்பால் மக்கள் அளித்த வாக்கல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பில் மக்கள் கொண்ட வெறுப்பே இவருக்கு வாக்களிக்கப்பட்டது.

இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டக்களப்புக்கு வந்து மூன்று வருடமாகின்றது. ஆனால் செய்த அபிவிருத்திகள் எதுவும் இல்லை. இவர் என்னைப் பார்த்து முன்னர் நீலக் கட்சியில் இருந்தார். இப்போ பச்சைக் கட்சியில் உள்ளார் எனச் சொல்கிறார். இவர் கடந்த தேர்தலில் என்னுடைய நீலக்கட்சியில் வேலை செய்ததனை மறந்துவிட்டாரா?. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னால் சென்று வாய்ப்புக் கிடைக்கவில்லை. பின்னர் ஆயுதக் குழக்களின் கட்சியான பிளட்டில் போட்டியிட்டவர். இப்படிப்பட்டவர் விஸ்வாமித்திரன் மாதிரி என்னிடம் புருடா விடுகின்றார்.

இனவாதம் பேசி மக்களை ஏமாத்தி அரசியலில் தன்னை தக்கவைக்கலாம் என நினைப்பதற்கு மட்டக்களப்பு மக்கள் தயாரில்லை. இவரைப்பற்றி மக்களுக்கு நன்கு தெரியும். இவருடன் எந்த மக்களும் இலகுவில் தொடர்பு கொள்ள முடியாது என்றும் அதுவும் இரவு ஆறு மணிக்கு பின்னர் யாருமே தொடர்பு கொள்ள முடியாதாம். அவ்வளவு பிசியாம். அப்படி என்னதான் கிளிக்காரோ தெரியாது. எப்படி பணம் சம்பாதிக்கலாம் எப்படி மாடிவீடுகளை கட்டலாம் என்பதில் பிசியாக்கும் என மக்கள் என்னிடம் தெரிவிக்கின்றார்கள். இப்படிப்பட்டவர் என்னிடம் நீலக்கட்சி, பச்சைக்கட்சி பற்றி கூறுகின்றார். எந்தக் கட்சியாக இருந்தாலும் நான் மக்களுக்காகவும், மாவட்ட அபிவிருத்திக்காகவும் ஆளும் கட்சியில்தான் உள்ளேன். உங்களைப்போல் சொந்த அபிவிருத்திக்காக அரசுக்கு முட்டுக் கொடுப்பவன் அல்ல.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்த போது நான் பிரதி அமைச்சராக இருந்தவன். நான் மட்டக்களப்பில் என்ன அபிவிருத்தி செய்தேன் என்பதனை ஜனாதிபதியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அரசாங்கத்தின் பிரதான பங்காளியாகிய நீங்கள் மக்களுக்கு ஒரு முகத்தினையும் அரசாங்கத்துக்கு ஒரு முகத்தினையும் காட்டும் நடிகன் நீங்கள் என்பது எமது மக்களுக்குத் தெரியும். நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்த அபிவிருத்தி பற்றி ஒவ்வொரு மேடையிலும் பேசிக்கொண்டிருக்க முடியாது. அது உங்களுக்கு தெரியும். நான் கட்டிய பாடசாலைக் கட்டடங்களை திறக்கவே நேரம் இல்லாமல் இருந்தவன். ஆனால் வியாளேந்திரனைப் போல் கட்டப்பட்ட கிணற்றுக்கு திறப்புவிழா வைத்து உலகசாதனை படைக்க முடியாது. அப்பேற்பட்ட அபிவிருத்தியின் நாயகன்தான் வியாளேந்திரன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான் தமிழ் மக்களுக்கு தீர்வு கொண்டுவரப்போகின்றார்களாம் என வியாளேந்திரன் பேசுகின்றார். அவர் தீர்வு வரைவினை வாசித்தாரோ தெரியாது. அதற்கும் நேரம் இல்லாமல் இருக்கும். ஏனென்றாம் மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதில் இரவு பகலாக நித்திரை விழித்து திட்டம் வரைகின்றார் போல். இந்த தீர்வுப் பொதியில் ஆனமான விடயம் எதுமில்லை. இதில் மாகாணசபையின் சில அதிகாரங்கனை சேர்ப்பது பற்றியே யோசிக்கின்றார்கள். மற்றும்படி சமஸ்ரி பற்றி எதுவும் இல்லை. இப்படியிருக்கம் போது மக்கள் உங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. நாங்கள் அரசாங்கத்தில் இருக்கும் போது நீங்கள் மக்களை ஏமாற்ற நான் அனுமதிக்கப்போவதில்லை என்றார்.