அரசாங்கத்திலிருந்து கூட்டாக வெளியேறுவோம் – மஹிந்த அமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை பலவந்தமாக அரசாங்கத்திலிருந்து ​வெளியேற்ற யாராவது முயற்சித்தால் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாகவே அரசாங்கத்திலிருந்து வெளியேறலாமென்று தீர்மானித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

16 உறுப்பினர்களுக்கு விருப்பத்துடன் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு உரிமையுண்டு, கட்சியிலிருந்து எவரையும் நீக்கவோ அல்லது கட்சியை பிரிக்கவோ மத்திய செயற்குழு அனுமதிக்காது. கட்சி அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து செயற்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், எமது கட்சிக்குள் பிளவு வரக்கூடாது என்பதில் ஜனாதிபதியும் உறுதியாக உள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை நடத்துவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. எனினும் ஐ.தே.க கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகள் மற்றும் குற்றங்களை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செயற்படுவதாக இருந்தால் மட்டுமே நாம் ஐ.தே.கவுடன் அரசாங்கத்தை தொடர விரும்புகின்றோம். அவர்கள் தமது தவறுகளையும் குற்றங்களையும் உணர மறுப்பார்களாயின் கூட்டரசாங்கத்தை நடத்துவது அர்த்தமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]