அரசமைப்பு தயாரிப்பிலிருந்து அரசு பின்வாங்கவே கூடாது ; சுமந்திரன் கோரிக்கை

புதிய அரசமைப்பு தயாரிப்புப் பணியிலிருந்து பின்வாங்காது அதை அரசு துணிவுடன் முன்னெடுக்கவேண்டும் என்றும், அந்தப் பணி தோல்வியில் முடியக்கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் தெரிவித்தது.

“நாடாளுமன்றம்தான் முதன்மையானது. அதற்கு மேல் எந்தவொரு சபையும் இருக்கமுடியாது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“பலவந்தமாகக் காணாமல்போகச்செய்வதிலிருந்து ஆட்களைப் பாதுகாக்கும் சர்வதேச சமவாய சட்டமூலம் மீளப்பெறப்படவில்லை. அது மீண்டும் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வர் தெரிவித்துள்ள கருத்தை வரவேற்கின்றோம்.

நாட்டிலே முக்கிய சமயத் தலைவர்கள் விடுத்த கோரிக்கையையடுத்தே அரசு இது விடயத்தில் பின்வாங்கியது என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தது. அப்படியொரு நிலை இருக்கமுடியாது; இருக்கவும் கூடாது. நாட்டில் என்ன நடக்கவேண்டுமென நான்கு பேர் சேர்ந்து சட்டம் இயற்றக்கூடியதாக இருக்கும் என்றால் இந்த நாடாளுமன்றம் எதற்கு?

நாடாளுமன்றமே முதன்மையானது. மக்கள் இறைமை, சட்டவாக்க அதிகாரம் அதன் ஊடாக மட்டுமே செயற்படுத்தப்படவேண்டும். எனவே, இதற்கு மேலாக இன்னுமொரு உயர்ந்த சபை இருக்கமுடியாது. எனவே, அரசு முன்வைத்த காலை பின்வைக்கக்கூடாது. துணிவுடன் செயற்படவேண்டும்.

மக்கள் ஆணையின் பிரகாரம் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். இது வரவேற்கப்படவேண்டிய விடயம். புதிய அரசமைப்பை உருவாக்கவே பிரதான இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசு அமைத்தன. இதற்காக மக்கள் ஆணையும் இருக்கின்றது.

புதிய அரசமைப்பைக் கொண்டுவர ஒன்றரை வருடகாலமாக நிறைய நேரம் செலவிடப்பட்டுள்ளது. பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து சமூகத்தையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் நடவடிக்கை இடம்பெறுகின்றது. அது சிறப்பாகக் கைகூடவேண்டும். அரசமைப்பு தயாரிப்புப் பணி தோல்வியில் முடியக்கூடாது. அப்படி தோல்வியடையுமானால் இந்த நாட்டில் நல்லிணக்கம் தோல்வியடைந்ததாகவே சரித்திரத்தில் எழுதப்படும்.

70 வருடகாலமாக தீர்க்கமுடியாதுள்ள பிரச்சினையை ஓரிரு வருடங்களுள் தீர்க்க முற்படும்போது தடங்கல்கள், இடையூறுகள், எதிர்ப்புகள் வரலாம். அவை வராது என்று நினைக்கவில்லை. நிச்சயம் வரும். எனினும், அரசு புறமுதுகுகாட்டி ஓடிவிடாது, தீர்வை நோக்கிப் பயணிக்கவேண்டும்.

அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஏற்றுக்கொள்கின்ற ஓர் அடிப்படைச்சட்டம், இனங்களுக்கிடையிலான சமூக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவேண்டும். அப்போதே சுபீட்சமான நிலை ஏற்படும்” – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]