அம்பாந்தோட்டை உடன்பாடு கைச்சாத்திடப்படுமாயின் சீனாவின் கடற்படைத் தளம் அமைவது உறுதி – இந்தியா எச்சரிக்கை

அம்பாந்தோட்டை உடன்பாடு கைச்சாத்திடப்படுமாயின் சீனாவின் கடற்படைத் தளம் மற்றும் சீன விமானப்படைத் தளம் என்பன அங்கு அமைக்கப்படுவது உறுதியான விடயம் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அருண்குமார் சிங், “சீனாவின் காசோலைப் புத்தக இராஜதந்திரம்’ என்ற தலைப்பில் “டெக்கான் குரோனிக்கல்’ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

சீனாவின் காசோலைப் புத்தக இராஜதந்திரத்தில் இருந்து மோசமான பாடத்தைக் கற்ற முதலாவது நாடு இலங்கை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீனாவுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இன்று அம்பாந்தோட்டை துறைமுகமும், அதற்கு அருகேயுள்ள விமான நிலையமும், பயன்படுத்தப்படாதவையாக இருப்பதுடன், இலங்கைக்கு ஒரு நிதிச் சுமையாகவும் மாறி விட்டது.
சீனா சுமார் 9 பில்லியன் டொலரை முதலீடு செய்தது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்காக 1.1 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த முடியாதிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடன் நிவாரணம் தொடர்பான சர்ச்சைக்குரிய உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படவுள்ளது. இதன்படி, சின நிறுவனம் ஒன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 60 தொடக்கம் 80 வீதம் வரையான முகாமைத்துவத்தை 99 அல்லது 50 ஆண்டுகள் வரையில் கட்டுப்படுத்தும் குத்தகையைப் பெற்றுக் கொள்ளவுள்ளது.

இந்த உடன்பாடு சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டால், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் கடற்படைத் தளமும், அதற்கு அருகில் உள்ள விமான நிலையத்தில் சீனாவின் விமானப்படைத் தளமும் அமைக்கப்படுவது உண்மையாகி விடக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]