அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் புதிய கூட்டணி

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் ஹசன் அலியும் ஆகியோர் இணைந்து, “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் இன்று காலை கொள்ளுப்பிட்டி, ரேணுகா ஹோட்டலில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டதுடன்,புதிய கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவராக, மூத்த அரசியல்வாதி ஹசன் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

“ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அனைத்துச் சபைகளிலும் மயில் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தாம் தலைமை வகிக்கும் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் பங்காளிக் கட்சியாக இருப்பதனால் உள்ளூராட்சித் தேர்தலில் சில மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதோடு வேறு சில மாவட்டங்களில் தனித்தும் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஸாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எம்.ஹசன் அலி மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோர் அங்கம் வகிக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு என்பன இணைந்து புதிய கூட்டமைப்பு உருவாக்கியுள்ளன.

தமிழ் மக்களின் நலன்களை பேணும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளதை போல முஸ்லிம் கட்சிகளையும் இணைந்து கூட்டணியை உருவாக்கும் கோரிக்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக காணப்படுகின்றது.

இந்நிலையில், புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒருசில கட்சிகள் மாத்திரம் இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், முதற்கட்டமாக இரண்டு கட்சிகளை உள்ளடக்கி புதிய கூட்டணியை உருவாக்கும் இன்றைய பேச்சுவார்த்தையில் ஹசன் அலி, பிரதியமைச்சர் அமீர் அலி, மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஏனைய கட்சிகளையும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டுடன் இணைந்துகொள்ளுமாறு அமைச்சர் ரிஸாட் பதியுதீன் இன்றை பேச்சுவார்த்தையின் போது அழைப்பு விடுத்தார்.