அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகியமையானது புதிய கலாசாரததை உருவாக்கியிருப்பதாக பிரதமர் தெரிவிப்பு

சமகால நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய கலாசாரத்தையும் பாராளுமன்றத்தில் புதிய சம்பிரதாயத்தையும் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று உருவாக்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதனையிட்டு தாம் பெருமையடைவதாகவும் பிரதமர் கூறினார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியில் இருந்து விலகிக்கொள்வதற்காக மேற்கொண்ட தீர்மானம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

பொதுவாக தவறிழைத்தார்கள் என தீர்மானிக்கப்பட்டவர்களே பதவி விலகுவார்கள். ஆனாலும் இன்று நடைபெறுகின்ற விசாரணைகளில் அரசாங்கம் தலையீடு செய்வதில்லையென்பதை நிரூபிக்க அவர் பதவி விலகி முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளார். என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நாம் இன்று புதிய சம்பிரதாயம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதனையிட்டு பெருமையடைகின்றோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியைச்சார்ந்த நாம் எவரேனும் திருடர் என்றால் அவ்வாறானோரை கட்சியில் வைத்துக்கொள்ளமாட்டோம். நீக்கிவிடுவோம். எங்களுக்கு திருடர்களை வைத்துக்கொள்ள வேண்டிய எந்தத் தேவையுமில்வை. தூய்மையான அரசியலே எமது கட்சியின் கொள்கை.

ஏன் அங்கிருப்பவர்கள் (எதிர்தரப்பில் இருப்பவர்கள்) குழப்பம் அடைகின்றீர்கள். அவ்விடத்தில் மணல் திருடர்கள் உள்ளார்களா? கெரம் திருடர்கள் உள்ளார்களா? அப்படியானால் கூக்குரலிடுவது சரி. தூள்காரர்கள் இருக்கின்றார்களா? அப்படியானால் கூக்குரலிடுவது சரி. சுனாமி திருடர்கள் இருக்கின்றீர்களா? கூக்குரலிடுங்கள். அப்படியானால் கூக்குரலிடுங்கள். இல்லாவிட்டால் கத்த வேண்டாம்.

இதற்கு முன்னர் திருடர்கள் எவ்வாறு செயற்பட்டார்கள்? தற்போது இந்;த திருடர்கள் எவ்வாறு இருக்கின்றார்கள்? நாம் எவ்வாறு முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளோம் என்பதை இந்நாட்டில் விவாதிக்கலாம். அமைச்சர் ஒருவர் இதற்கு முன்னர் எந்த விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார் என்று நான் கேட்கின்றேன் என்றும் கேள்வி எழுப்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாம் இன்று நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இதனை உங்களால் பத்து ஆண்டுகளாக செய்ய முடியாமல் போய்விட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உயர் நீதிமன்றத்திற்கு சென்று தடையுத்தரவு பெறவில்லை. ஆணைக்குழுவிற்கு சென்றார், பதிலளித்தார், பதவி விலகினார், தற்போது சபையில் பின்வரிசை ஆசனத்தில் அமர்ந்து விட்டார். சொலிசிட்டர் ஜெனரல் பிரியசாத் டெப்பிற்கு என்ன நடந்தது? அரசாங்கம் செய்வது சரியில்லையென கூறியதால் சட்டமா அதிபராக விடாமல் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பினார்கள். அவருடைய நேரப்பலன் சிறந்ததாக இருந்தது. பிரதம நீதியரசராக பதவியேற்றுக்கொண்டார். இப்படி எத்தனை பேரை சிறையில் வைத்திருந்தீர்கள்.

இதுதான் நல்லாட்சியின் மூலம் நாட்டில் ஏற்பட்ட மாற்றம். யாரையும் நாங்கள் ஓரங்கட்டி வைக்கவில்லை. இவை தொடர்பில் எவருக்கும் பேச முடியாது. இன்று ஊடகங்களின் செய்றபடுவதை பார்த்தால் ஊடக சுதந்திரம் சிறப்பாக உள்ளதை உணர முடிகின்றது. அன்று நாம் பதவி விலகுமாறு கூறிய போது ஊடகங்கள் எம்மை துரோகிகளாக சித்தரித்தன. அன்று ஊடகங்களுக்கு சுதந்திரமில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.