அமைச்சர் மனோ கணேசன் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதியைச் சந்தித்தார்.

அமைச்சர் மனோ கணேசன் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதியைச் சந்தித்தார்.

மனோ கணேசன்

அனுராதபுரத்தில் கடந்த 19 நாட்களாக தொடர் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் இன்று முக்கியப் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.

இன்றைய தினம் நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து தாம் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியதாக அமைச்சர் மனோ கணேசன் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தமது வழக்குகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டமையை எதிர்த்து கடந்த 19 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பிலும், இந்நிலைமை காரணமாக நேற்று வடக்கில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பிலும் பேச்சு நடத்தியதாக அமைச்சர் மனோ தெரிவித்துள்ளார்.

“பேச்சின்போது, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வடக்கில் நடைபெறும் எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக அங்கு சட்டம், ஒழுங்குக்கு பாதகம் இல்லை என தனக்கு வட மாகாண பொலிஸ் மா அதிபரும், இராணுவத் தளபதியும் கூறியுள்ளதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார்.

சட்டம், ஒழுங்குக்கு பாதகம் இல்லையானாலும் அரசியல் ரீதியாக இது பெரும் நெருக்கடி நிலைமையை வடக்கில் ஏற்படுத்தியுள்ளது என நான் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினேன்.

இதையடுத்து, சட்டமா அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி இதுபற்றிய சட்டமா அதிபரின் கருத்தைக் கேட்டு தெரிந்துகொண்டார்.

இந்த வழக்கின் சாட்சிகளாக இருக்கின்ற முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களே தங்களுக்குப் பாதுகாப்பைக் கோரி வவுனியாவுக்குச் செல்ல இயலாது எனக் கூறுவதாகவும், இதனாலேயே இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் கூறுவதாக, ஜனாதிபதி என்னிடம் கூறினார்.

இன்று யுத்தம் முடிந்த நிலையில் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் எவரும் சென்று வரக்கூடிய நிலையில், சட்டமா அதிபர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது தமிழ் மக்களுக்குத் தவறான செய்தியை தருகிறது என நான் எடுத்து கூறினேன்.“ எனக் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]