அமைச்சரவையில் எரிபொருள் சூத்திரம் இன்று முன்வைக்கப்பட மாட்டாது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான சூத்திரம் இன்று (24) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சூத்திரம் தொடர்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தியோகபுர்வ வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளதனால் இந்த விலைச் சூத்திரம் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள விலை சூத்திரத்தை இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில், இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு விலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்த பின்னர், பெற்றோலிய வளத்துறை அமைச்சுக்கு நாளொன்றுக்கு 38 மில்லியன் ரூபாய் மேலதிக நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க இதனை ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, நிதியமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, நிதியமைச்சின் ஊடாக விலை சூத்திரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது, எரிபொருள் விலை சூத்திரம் உருவாக்கும் நடவடிக்கை நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கு அமைவாக, இந்த விலை சூத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]