அமெரிக்கா இலங்கையிடம் விளக்கம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஜெருசலேம் தொடர்பான ‘அமெரிக்கா’வின் தீர்மானத்துக்கு எதிரான யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தது ஏன் என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பத்தாவது விசேட அமர்வில், ‘ஜெருசலேமின் நிலைப்பாடு’ எனும் தலைப்பிடப்பட்ட பிரேரணைக்கு சார்பாக இலங்கை வாக்களித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஜெருசலேம் தொடர்பான பிரச்சினைகளை இருநாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் மூலமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கான பொதுவான தலைநகரமாக ஜெருசலேம் பகிரப்பட வேண்டும் என்ற சர்வதேச புரிதலுக்கிணையான இலங்கையின் கொள்கை நிலைப்பாட்டுடன் இந்த பிரேரணைக்கு சார்பாக வாக்களிக்கப்பட்டதாக அமைச்சு விளக்கமளித்துள்ளது.

இந்தத் பிரேரணைக்கு சார்பான இலங்கையின் வாக்களிப்பானது, ஐக்கிய நாடுகளின் எந்தவொரு அங்கத்துவ நாட்டுக்கும் எதிரான வாக்கு அல்ல என இலங்கை குறிப்பிட்டுள்ளது. அனைத்து விடயங்களையும் பேச்சுவார்த்தைகள் மூலமாக நிரந்தரமாக தீர்த்துக்கொள்வதால் இரு தரப்பினரினதும் நிலையான சமாதானத்தினை எய்திக்கொள்ள முடியும்.

ஆதலால், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அர்த்தமுள்ள பேச்சுவாரத்தைகள் மூலமாக தீர்வுகளுக்கு இட்டுச்செல்வதற்கான நிலைமைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]