அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி சிரியாவுக்கு ரஷ்யா ஆதரவு – சர்வதேச அரங்கில் கடும் எதிர்ப்பு

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி சிரியா அரசுக்கு ரஷ்யா, ஈரான் அரசுகள் ஆதரவுத் தெரிவித்து வருவதால் சர்வதேச அரசியலில் ஒரு பதற்றம் நிலவிய வண்ணமே உள்ளது.

ரஷ்யா மீது டிரம்பின் அதிரடியால் அமெரிக்கா தொடுத்த ஏவுகணை தாக்குதலுக்கு பல்வேறு சர்வதேச நாடுகளும் வரவேற்பளித்துள்ள சூழலில் ரஷ்யா சார்பு நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச அரங்கில் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்திலும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கடும் சொற்போர் இடம்பெற்றிருந்தது.

சிரியாவில் உள்நாட்டு மக்கள் கொடூரமாக கொல்லப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையிலேயே சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு ரஷ்யாவும் ஈரானும் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன.

சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் கடந்த 7ஆண்டுகளாக ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் முகாமின் மீது சிரியா நாட்டு விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியதில் சுமார் நூறு பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலடியாக சிரியா நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான தளத்தின்மீது சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது மற்றும் சிரியாவின் இறையாண்மையை அவமதிக்கும் வகையில் அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காரசாரமான விவாதம் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அரங்கேறியுள்ள சூழலின் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாகும் என்றே சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]