பொய்யான முகவரியைக் கொடுத்து கார் பதிவு சிக்கலில் அமலா பால்

புதுச்சேரி : நடிகை அமலாபால் புதுச்சேரியில் வசிப்பதாகப் பொய்யான முகவரியைக் கொடுத்து கார் பதிவு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அமலாபால், மாநில குற்றப்பிரிவு போலீஸ் முன்பு வருகிற 15-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

அமலாபால், கேரளாவில் வாகனத்தைப் பதிவு செய்யாமல் பாண்டிச்சேரியில் வரி குறைவு என்பதற்காக போலியான முகவரியைக் கொடுத்து பதிவு செய்ததால் கேரள மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரித் தொகை கிடைக்காமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. நான் சட்டத்தை மீறி எதையும் செய்யவில்லை என அமலா பால் விளக்கம் அளித்தார்.

இந்த வழக்கில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான், அமலாபால் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்திருந்தார். கேரள அரசு அமலாபால் வரி ஏய்ப்பு செய்ததை நிரூபித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது அமலாபால், லடாக், இமயமலைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தார். இந்த வழக்கில் கைதாவதை தடுக்க முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் அமலாபால். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், முதலில் அமலாபால் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு போலீஸ் முன்பு வருகிற 15-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, மனு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]