அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு பேட்டை நன்கொடையாக வழங்கிய விராட் கோலி

இந்திய அணி தலைவர் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட பேட்டை நன்கொடையாக பாகிஸ்தான் முன்னாள் தலைவர் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி பரம எதிரிகளுக்கு இடையிலான மோதல் என்று வர்ணிக்கப்படும். மைதானத்திற்குள்ளேயும், வெளியேயும் வீரர்களும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். இந்திய ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும் அந்த கண்ணோட்டத்தில்தான் போட்டியை ரசிப்பார்கள்.

இரு அணிகளும் மோதும்போது ஒரு வீரர் சதம் அடித்தாலோ அல்லது சாதனை படைத்தாலோ எதிரணி வீரர்கள் உற்சாகமூட்டமாட்டார்கள். முறைத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

ஆனால், விராட் கோலி அதில் இருந்து சற்று மாறுபட்டு காணப்படுகிறார். மொகமது ஆமிர் தடைக்காலம் முடிந்து மீண்டும் விளையாட வந்த காலத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்தார். டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.

அப்போது ஆமிருக்கு கோலி பேட்டை பரிசாக அளித்தார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பின்னரும், பாகிஸ்தான் வீரர்களுடன் விராட் கோலி சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். அதற்கு மேலாக டோனி, விராட் கோலி பாகிஸ்தான் தலைவர் சர்பிராஸ் அகமது மகனுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரரும், முன்னாள் தலைவரும் ஆன ஷாகித் அப்ரிடி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும், இந்திய அணி தலைவர் விராட் கோலி, இந்திய வீரர்கள் அனைவருடைய கையெழுத்திட்ட தனது ஜெர்சியை பரிசாக வழங்கினார்.

தற்போது அப்ரிடி நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு தனது கையெழுத்திட்ட பேட்டை விராட் கோலி நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]