‘அன்னை பூபதி’யின் 30ஆம் ஆண்டு நினைவுதினம்

அன்னை பூபதி

இந்திய படையினர் உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ‘அன்னை பூபதி’யின் 30ஆம் ஆண்டு நினைவுதினம், இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள அன்னை பூபதியின் நினைவு தூபிக்கு அருகே குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

அன்னை பூபதியின் பிள்ளைகளின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில், அன்னை பூபதியின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா, அன்னையின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து பொதுச்சுடர் ஏற்றினார்.

1988ல் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது.

உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும். புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக அன்னை பூபதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4 ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறியவே சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர்.

அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார். பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர். நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது.

ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.

அன்னை பூபதியின் நினைவுநாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு கூரப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]