அன்னதான நிலையங்கள் பதிவு செய்யப்படுவது கட்டாயம்

வெசாக், பொஷன் போயா தினங்களில் அன்னதானம் வழங்கும் சகல நிலையங்களும் சுகாதார மருத்துவ அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளரான விசேட நிபுணர் பபா பலிகவடன இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெசாக் மற்றும் பொஷன் போயா காலங்களில் அன்னதான சாலைகளை நடத்துவது பற்றி சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பொதுமக்களுக்கு தானமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வது தொடர்பான யோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பபா பலிகவடன சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அன்னதானம் வழங்கும் போது, பொலித்தீன் பாவனையை தடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அன்னதான சாலைகளை சோதனை செய்து வழங்கப்படும் உணவுகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அன்னதானம் ஆரம்பிக்கும் முன்னரும், நிறைவடைந்த பின்னரும் குறித்த அன்னதானசாலை சுகாதார பரிசோதகரின் ஊடாக சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் சுகாதார மட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அன்னதானம் வழங்கும் நபரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக்கொண்டு அவர்களை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவுறுத்தல்கள் தற்போது நாட்டின் சகல பிரதேசங்களிலும் உள்ள பிரதேச சுகாதார பிரிவுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.