அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து மாவீரர் நாளை புனித தினமாக அனுஸ்டிக்கவேண்டும் – மாவை

அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து மாவீரர் நாளை புனித தினமாக அனுஸ்டிக்கவேண்டும் – மாவை

மாவீரர் நாளை

எந்தவிதமான அரசியல் கலப்பும் இன்றி அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து மாவீரர் நாளை புனித தினமாக அனுஸ்டிக்க முன்வர வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாட்டீன் வீதியில் அமைந்துள் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் நேற்று (22.11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கார்த்திகை மாதம் எமது மக்களுக்கு ஒரு புனிதமான காலம். இலங்கையில் தமிழின பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத காரணத்தால் இராணுவ அடக்குமுறை இடம்பெற்ற காரணத்தால் ஆயுதம் எடுத்து போராட வேண்டிய நிலை தமிழ் இனத்துக்கு ஏற்பட்டது. அதன் விழைவாக வரலாற்று நிகழ்வாக ஆயுத போராட்டம் இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாக இருந்தனர். அவர்கள் விடுதலை போரை நடத்தி வந்தார்கள். போராட்டத்தின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தவர்கள்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை தமிழ் இனத்துக்காக ஆகுதி ஆக்கியவர்களின் நினைவு நாளாக மாவீரர் நாள் மதிக்கப்படுகிறது. அவர்கள் நினைவாக கார்த்திகை 21 தொடக்கம் 27 ஆம் திகதி வரை பல வகையில் அனுஸ்டிக்கப்படுகிறது.

விடுதலைக்காக போராடிய இனத்தின் சார்பில் தமிழ் மக்கள் ஆகிய நாம் அனைவரும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வரலாற்று நிகழ்வு ஆகும்.
எனவே ஒவ்வொரு துயிலும் இல்லங்கள், நினைவிடங்கள், அலுவலகங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வந்துள்ளோம்.

ஆனால் அண்மைக் காலமாக இந்த நிகழ்வில் அரசியல் ரீதியாக தலையீடும் குழப்பங்களும் ஏற்பட்டு வருவது மிகவும் துக்ககரமான செயற்பாடாக உள்ளது. பொதுமக்கள் இது தொடர்பில் மனவேதனை அடைகிறார்கள்.
அத்துடன் இந்த நிகழ்வு நாட்களில் புலம்பெயர் நாடுகளில் எமது தமிழ் மக்கள் கழியாட்டங்களிலும் ஈடுபடுவதாக அறிய வந்துள்ளது. இது துக்ககரமான விடயம். விடுதலை போரில் தம்மை அர்ப்பணித்தவர்களின் நினைவாக மேற்கொள்ளப்படும் புனித நிகழ்வில் இவ்வாறான கழியாட்டங்களையும், போட்டிகளையும் ,அரசியல் இலாபங்களையும் அனைவரும் தவிர்க்க வேண்டும்.

அனைவரும் இதை புனித சம்பவமாக அனுஸ்டிக்க வேண்டும். மாவீரரின் தியாகத்தை மதிப்பதாக இருந்தால் எந்தவிதமான அரசியல் கலப்பும் இன்றி, அதற்குள் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்; மாவீரர்களின் உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்கள் தலைமையில் நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாவீரர்களை மதிப்பவர்கள் துயிலும் இல்லங்கள் சென்று அஞ்சலி செலுத்தலாம்.

எனவே அனைவரும் ஒன்று பட்டு ஆன்ம ஈடேற்றத்துக்கு உரிய பிரார்த்தனை மேற்கொண்டு அமைதியான முறையில் வன்முறைக்கு இடமளியாமல் அஞ்சலி அனைவரும் முன்வர வேண்டும். மாவீரர் குடும்பங்களை எப்பொழுதும் மதிப்பவர்களாக இருப்பதுடன் வாழ் நாள் முழுவது இந்த தியாகத்தை புரிந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]