அனைத்து இனங்களுக்கும் சமூக நியாயத்தை வழங்கும் அரசியல் சக்தியே எதிர்காலத்தில் நாட்டில் ஆட்சியமைக்க முடியும்

அனைத்து இனங்களுக்கும் சமூக நியாயத்தை வழங்கும் அரசியல் சக்தியே எதிர்காலத்தில் நாட்டில் ஆட்சியமைக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இனவாதத்துடன் பிரிந்திருக்கும் எவரும் ஆட்சியமைக்க முடியாதெனவும் நேற்று பிற்பகல் கதுருவெல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடி கட்டிடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரே நாட்டு மக்களாக அனைவரும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். அனைத்து இனங்களிலுமுள்ள பிற்போக்குவாதிகள் பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்தி ஒற்றுமையின்மையை விதைக்க முயற்சியெடுக்கின்றனர். அனைவரும் அது தொடர்பில் நுண்ணறிவுடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டும்.

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யும் போது இனம்இ மதம் அல்லது கட்சிக்குரியதென்பது முக்கியமானதல்ல என்பதுடன் தேவை மட்டுமே முக்கியமானது.

நாட்டின் அபிவிருத்திக்காக அறிவும், பண்பும் நிறைந்த மக்களை உருவாக்குவதற்காக கல்வி வளர்ச்சியடைய வேண்டும் எனவும், கல்வித்துறையில் பௌதீக மற்றும் மனித வள அபிவிருத்திக்காக எந்தவொரு பின்னடைவுமின்றி தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் கதுருவெல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை பாடசாலைப் பிள்ளைகள் அன்பாக வரவேற்றார்கள்.

நினைவுப் படிகத்தை திறந்துவைத்து மூன்றுமாடி கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மாணவர்களுக்கு உரித்தாக்கினார்.

‘ரஜரட்ட நவோதயம் – புத்தெழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஜனாதிபதி அவர்களது ஆலோசனைக்கமைய இந்த பாடசாலையை அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் கீழ் இந்த மூன்று மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் 2015 ஒக்டோபர் 18 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களால் நாட்டப்பட்டு நிர்மாண வேலைகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளது.

திறமைகாட்டிய பிள்ளைகளுக்கான பரிசில்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சிட்னி ஜயரத்ன உள்ளிட்டோரும் அதிபர் ஏ.இக்பால், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அத்துடன் மின்னேரிய தேவாலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த வழிபாட்டு தலமும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]