அனர்த்தத்தை எதிர்க்கொண்டுள்ளவர்களுக்கு உதவ முப்படையினர் களத்தில்

நாட்டில் பெய்யும் அடைமழை காரணமாக பல இடங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தற்சமயம் நிலவும் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி பிரதமர் முப்படையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

குறிப்பாக களு கங்கை, களனி கங்கை, வளவை கங்கை, ஜின் கங்கை ஆகிய நதிகள் சார்ந்தும், அவற்றின் கிளைகள் சார்ந்தும் இடர் நிலை ஏற்படக்கூடும். இந் நதிகளின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, நதிகள் அருகில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது. களனி கங்கைக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆற்றின் நீர்மட்டம் மிகவும் உயர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தினால், தெஹியோவிட்ட மற்றும் கல்துவ ஆகிய நகரங்களில் நீர்மட்டம் ஐந்தடி வரை உயர்ந்துள்ளது. தெஹியோவிட்ட தெரணியகல பிரதான வீதி வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதேவேளை, அந்தவீதியில் உள்ள கஹனாவிட்ட பிரதேசத்தில் பாரிய மண்திட்டு ஒன்று உடைந்து வீழந்ததில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவிசாவல கேகாலை பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அடைமழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் புளத்கொஹப்பிட்டிய, தெஹியோவிற்ற இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, பெல்மதுலை, குருவிற்ற, அயகம, நாகஹவத்த காலி மாவட்டத்தில் பத்தேகம, யக்கலமுல்ல களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள, அகலவத்த, வலல்லாவிற்ற, பதுரளிய முதலான பிரதேச செலாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் குறித்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹொரணை மஹரகம பிரதான வீதியில் 280ஆம் இலக்க பஸ் வண்டி பயணிக்கும் தனி வீதி வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்த வீதிக்கு அருகாமையில் உள்ள குறுக்கு வீதிகளிலும், உள் வீதிகளிலும் வெள்ள நீர் சேர்ந்துள்ளது. கஹவத்த மற்றும் பெல்மதுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல பிரதேசங்கள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன. இரத்தினபுரி எம்பிலிபிட்டிய வீதியின் மாதம்பை சந்தி, இரக்குவானை மாதம்பை வீதி ஆகியன நீரினால் மூழ்கியுள்ளன.

வலஸ்முல்ல சப்புதந்திரி குன்றுக்கு அருகில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு வரை மண்சரிவு அபாயம் காணப்படுகிறது. இதனால், இந்தப் பிரதேசத்தின் அனைத்து உள் வீதிகளும் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன. கிரம ஓய ஆற்றின் வெள்ளப் பெருக்குக் காரணமாக வறாபிட்டிய நகரம் முழுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஹந்துவல மற்றும் பாத்தேகம ஆகிய கிராமங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து மக்களை மீட்டெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

அடைமழை காரணமாக மண்சரிவு அபாயமும், மழையுடன் இடி மின்னல் தாக்கமும் தீவிரம் பெறும் நிலைமை உருவாகியுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. மரங்கள் முறிந்து வீழ்ந்து விபத்துக்கள் ஏற்படலாம். இது பற்றி அவதானமாக இருப்பது அவசியம். வெள்ள நீரில் இறங்குவதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இடர்காப்பு முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம், வளிமண்டலவியல் திணைக்களம் முதலான அமைப்புக்கள் நிலைமையை தொடர்ந்து அவதானித்து வருகின்றன. முப்படையினரும், பொலிசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

அவசர நிலைமைகள் குறித்து பொதுமக்கள் தொலைபேசி மூலம் தகவல் பெறலாம். அழைக்க வேண்டிய இலக்கம் 11% என்பதாகும்.

அடைமழை காரணமாக பெல்மதுல்ல பிரதேசத்தில் 20 குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொள்கின்றன. இந்த குடும்பங்களை சேர்ந்தோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதி அமைச்சர் துனேஷ் கன்கந்த நடவடிக்கை எடுத்துள்ளார். கஹவத்த பிரதேச செயலாளர் பிரிவில் முறிந்து வீழ்ந்த மரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தற்போதைய அடைமழையுடன் கூடிய காலநிலையால் காலி, மாத்தறை மாவட்டங்களில் கூடுதல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு சில இடங்களில் நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் ஐந்து வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 41 வீடுகள் பகுதியளவில் சேதங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர்கள் ஊடாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென உதவி பிரதேச செயலாளர் சதுரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கு முப்படை மற்றும் பொலிஸார் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரதேசங்களிலிருந்து மக்களை மீட்டெடுப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்வதாக மீட்புப் படையினர் தெரிவிக்கின்றனர். இதனால், கடற்படையினரின் உதவி கொண்டு சில மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 12 கடற்படைப் படகுகள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனெவிரட்ன தெரிவித்தார்.

வீரகெட்டிய, நெலுவ, மொரவக்க, முலட்டியன மற்றும் புலத்சிங்ஹல ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கு இராணுவத்தின் விசேட படையணி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று பிரிகேடியர் செனெவிரட்ன மேலும் தெரிவித்தார்.

இந்த மீட்புப் பணிகளில் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான நான்கு உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன என்று விமானப் படை ஊடகப் பேச்சாளர் குப் கெப்டன் கிஹான் செனெவிரட்ன தெரிவித்தார். இந்த நான்கு வானூர்திகளில் ஒன்று பதுரளிய பிரதேசத்தில் மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்று தற்காலிகமாக தங்க வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்படைக்குச் சொந்தமான படகுகள் கலவான, நெலுவ, கம்புறுபிட்டிய, பெலியத்த, பாதுக்க மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கென, கடற்படையின் 13 குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என காலி மாவட்டத்தின் செயலகத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் வஜிர அபேவர்தன இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இதுவரை வெள்ள அனர்த்தத்தினால் 76 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் ஐந்து மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்ட செயலக பிரிவில் 3% பேர் உயிரிழந்திருப்பதாக அந்த மாவட்டத்தின் செயலாளர் யு.டி.ஜெயலால் தெரிவித்தார். %0 ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று அவர் கூறினார்.

இதேவேளை இரத்தினபுரியில் 28 பேர் உயிரிழந்திருப்பதாக இடம்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காலி நெலுவ பிரதேசத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று மாத்தறை மொறவக்க பிரதேசங்களிலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இருப்பிடங்களை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]