அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு உரிய நிகழ்ச்சித்திட்டம் – ஜனாதிபதி பணிப்பு

திடீர் அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த வீடுகளை அரசாங்கத்தினால் நிர்மாணிப்பதற்கு உரிய நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
குறித்த நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் உரிய தகவல்களின் அடிப்படையில் அந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் இன்று (27) முற்பகல் களுத்துறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களுக்கான நட்டஈடு வழங்குதல், இடம்பெயர்ந்து மற்றும் அன்றாட தொழில்களை இழந்துள்ளவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான ஒரு முறைமை குறித்து தொடர்புடைய நிறுவனங்களுடன் அடுத்தவாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் அவ்வப்போது ஏற்படும் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் புதிய நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுற்று நிரூபங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாத்து, இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தொடர்ச்சியாக வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

அனர்த்தத்திற்குள்ளான பிரதேசங்ளைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதில் முக்கிய பொறுப்பு உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலை காரணமாக நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்புகளை வழங்கிவரும் முப்படையினர் பொலிஸார் மற்றும் ஏனைய அரச, அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்த ஜனாதிபதி, நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கையின்போது உயிரிழந்த இராணுவ வீரருக்கு அனுதாபங்களைத் தெரிவித்தார்.

நிவாரண உதவிகளை வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடுகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக குறித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், உயிர்களை மீட்பதற்குத் தேவையான படகுகள், குறித்த இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு கட்டணமின்றி அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்த முடியும் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய உடனேயே ஜனாதிபதி சீரற்ற காலநிலையினால் அனர்த்தத்திற்குள்ளான மக்கள் தொடர்பாக தகவல்களை அறிந்து கொண்டதன் பின்னர் நிவாரண உதவிகள் வழங்குவதில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான வஜிர அபேவர்தன, ராஜித சேனாரத்ன, மஹிந்த சமரசிங்க, அஜித் பி. பெரேரா மற்றும் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க, மாகாணசபை அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]