அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வு

கடும் மழையுடனான காலநிலை காரணமாக, 14 மாவட்டங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 ஆயிரத்து 943 பேர் இதுவரையில பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

20 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 956 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன், 24 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் உணவு தேவைக்காக 27 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அமல்நாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள ஆறு மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக முப்படையைச் சேர்ந்த ஐயாயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமை காரணமாக காலி மாவட்டத்தின் நாகொட, வெலிவிட்டிய, திவித்துர, பத்தேகம, போப்பே, பொத்தல பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்நிலங்களும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும், உடவளவ நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அவசர நிலைக்கு முகங்கொடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும், முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி மாவட்ட உதவிப் பணிப்பாளர் தம்பத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிக மழையுடன் நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் மின்னுற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்கல் வலு அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் மின்னுற்பத்தி 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீரற்ற வானிலையால் புத்தளம் மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வெள்ளம் காரணமாக மாதம்பே – பொதுவில பகுதியில் வீடுகளுக்குள் அகப்பட்டிருந்த மக்கள் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றில் அகப்பட்டிருந்த விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 28 பேர் பாதுகாப்புப் பிரிவினரின் தலையீட்டுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடுபிட்டிய ஓயா பெருக்கெடுத்ததை அடுத்து, சிலாபம் – கொழும்பு வீதி நீரில் மூழ்கியுள்ளது.

ரத்மலாஓயா பெருக்கெடுத்துள்ளதை அடுத்து, புத்தளம், மாதவக்குளம் பிரதேசத்தின் பல பகுதிகள் நீரில் மூழகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடைமழை காரணமாக லிந்துலை பகுதியில் சில வீடுகள் தாழிறங்கக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

லிந்துலை ஆற்றை அண்மித்த சில வீடுகளே குறித்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அத்துடன் குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய்த் தாக்கம் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

இதேவேளை, மழையுடனான காலநிலை எதிர்வரும் 26ஆம் திகதி வரை தொடரக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடையிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இடி மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]