உதவிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்காது எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வாழ்வாதார உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அனந்தி சசிதரன்!

சங்கானை பிரதேச சபைக்குட்பட்டு தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கான வாழ்வாதார உதவித் தொகை வழங்கும் நி-கழ்வு இன்று புதன் கிழமை நடைபெற்றுள்ளது. சங்கானை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்த மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பயனாளர்களுக்கான வாழ்வாதார உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கியதுடன் சிறப்புரையாற்றியிருந்தார். அவர் அங்கு உரையாற்றுகையில்..

அரச அலுவலர்களின் ஒத்துழைப்பு இன்மையாலேயே கடந்த காலங்களில் பின்தங்கிய இடங்களில் எந்தவொரு செயற்பாடுகளையும் செய்யமுடியாதிருந்தது. மகளிர் விவகாரம் புனர்வாழ்வு அமைச்சர் என்ற வகையில் கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி நிறைய வேலைத்திட்டங்களை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

சரியான திட்டங்கள் இனம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியும். உங்கள் உங்கள் பகுதிகளில் என்ன திட்டங்களை செயற்படுத்துவதன் மூலம் அந்தந்தப் பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கருதும் திட்டங்கள் குறித்து எமக்கு தெரியப்படுத்தினால் அத்திட்டம் குறித்து ஆராய்ந்து முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.

பிரதேச செயலர்கள் ஊடாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சு வடக்கு மாகாணத்தை புறந்தள்ளி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் மகளிர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வளித்தல் அமைச்சின் கீழ் திட்டங்களை செயற்படுத்த நாம் தயாராக இருக்கின்றோம். ஆகவே உங்கள் கிராமத்தின் அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் இந்த பிரதேசத்தில் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு பெண்தலைமைத்துவ குடும்பங்களை ஒன்றிணைத்து செய்யக்கூடிய செயற்திட்டங்களை தந்தால் அவற்றை பரிசீலித்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.

தனித்தனியே ஒவ்வொருவருக்கும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதை விட வட மாகாணத்திற்குள்ளாகவே மூலதனம் இருக்கும் வகையில் தொழில்துறையை விஸ்தரிப்பதன் மூலமே சமூதாய மேம்பாட்டை ஏற்படுத்த முடியும். அதற்கு சமூக நலனில் அக்கறையுள்ள அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களது ஒத்துழைப்பு அவசியமாகும்.

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் என்ற அடிப்படையிலான உதவிகள் தொடர்ச்சியாக எமக்கு கிடைத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. எனவே வடக்கு மாகாணத்திற்கு வருகின்ற நிதியைக் கொண்டு வடக்கு மாகாணத்திற்குட்பட்டு சிறு சிறு தொழில் முயற்சிகளை உருவாக்குவதன் மூலமாகவே எமது தொழில்துறையை விஸ்தரிக்க முடியும்.

அரசியல் கட்சி சார்ந்து நாம் செயற்படுவதில்லை. மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு நிறைவேற்றக்கூடியதாக இருப்பின் அவை, நிறைவேற்றப்படும் பகுதியின் அரசியல் பின்னணி குறித்து கவலைப்படாது எம்மால் ஆன உதவிகளை தொடர்ந்து செய்துவருகின்றோம். சில இடங்களில் உதவிகளைச் செய்கின்றபோது அது வேற்றுக்கட்சிக்குரிய இடம் நீங்கள் ஏன் அங்கு உதவிகளைச் செய்கின்றீர்கள் என்று சிலர் கேட்கின்றார்கள். நாங்கள் அவ்வாறு பார்க்கவில்லை. மக்கள் அனைவரும் எமது மக்கள். தமிழ் மக்கள் என்ற அடிப்படையில் தான் நான் செயற்பட்டுவருகிறேன். இவ்வாறு அவர் மேலும் கூறியிருந்தார்.