அனந்தியின் துப்பாக்கி விவகாரம் சபை அமர்வை புறக்கணித்து ஈ.பி.டி.பி வெளிநடப்பு செய்தது

யாழ்.மாநகர சபை அமர்வு இன்று (31) யாழ்.மாநகர சபை கேட்போர் கூடத்தில் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது, ஈ.பி.டி.பி சார்பில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் துப்பாக்கி வைத்திருப்பதாக கூறி பல சர்ச்சையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனைக் கண்டித்து ஈ.பி.டி.பி கண்டன பிரேரனையை முன்மொழிந்தனர். பிரேரனையில்,அரசியலில் பெண்களின் வகிபங்கு அரிதாகி இருக்கும் எமது நாட்டில் அரசியல் செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் ஒருசில பெண்கள் மீது அவதூறுகளை பூசி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவமானப்படுத்துவதுடன் அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதானது ஒரு அநாகரிகமான செயற்பாடாகும். இவ்வாறான செயற்பாடுகள் சபையில் கண்டிக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ் மாநகர சபை அமர்வில் கோரினர்.

கருத்து சபையில்கொள்ளப்படாமையால் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 30 நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகளை புறக்கணிப்புச் செய்தது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் சபையில் ஆட்சேபனை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு கொடுக்காத நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன சம்பவத்தை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளன.

இதுதொடர்பில் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் கூறுகையில் –

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களானது இனிவருங்காலத்தில் அரசியல் பிரவேசத்திற்கு வரவுள்ள பெண்களை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது. பெண்களுக்கெதிரான இவ்வாறான செயற்பாடுகள் இனியும் நடைபெறக் கூடாது என்பதை வலியுறுத்தி சபை கண்டிக்க வேண்டும். ஆனால் எமது இந்த சபை அதற்கு இடங்கொடுக்கவில்லை. இது மனவேதனையான விடயமாகும்.

அனந்தி சசிதரனிடம் கைத்துப்பாக்கி உள்ளதா அல்லது இல்லையா என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயம். அது தொடர்பில் நாம் அக்கறை கொள்ளவில்லை. ஆனாலும் அரசியலுக்கு முன்வந்துள்ள ஒரு பெண் உறுப்பினரை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையிலான இத்தகைய செயற்பாடானது அரசியலுக்கு வர இருக்கும் பெண்களுக்கு ஒரு அச்ச நிலையை உருவாக்குகின்றது.

எமது கட்சி அரசியல் செயற்பாடுகளில் பெண்களுக்கு சம அளவு பங்கு கொடுத்து, அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் பலமான செயற்றிட்டங்களை செயற்படுத்திவரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துவதுடன் குறித்த சம்பவத்தை நாம் கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

முன்பதாக கைத்துப்பாக்கி ஒன்றை அனந்தி சசிதரன் வைத்துள்ளார் என்று மாகாணசபையில் மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் பல்வேறு கருத்துக்கள் பலதரப்பினராலும் வெளியிடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]