அநாகரிகமாக சிகையலங்காரம் செய்யும் சிகையலங்கார நிலையங்களின் அனுமதி இரத்து!!

பாடசாலைகளின் ஒழுக்க விழுமியங்களைச் சீரழிக்கும் வகையில் மாணவர்களுக்கு அநாகரிகமாக சிகை அலங்காரம் செய்யும் சிகையலங்கார நிலையங்களின் (சலூன்) அனுமதி உடனடியாக இரத்து செய்யப்படும் என காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் அதரடி அறிவிப்பொன்றைச் செய்துள்ளார்.

காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள சிகையலங்கார நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுடனான கலந்துரையாடல் நகர முதல்வர் தலைமையில் நகரசபை மண்டபத்தில் சனிக்கிழமை 12.05.2018 இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் காத்தான்குடி நகர சபை முதல்வர், சிகையலங்கார நிலைய உரிமையாளர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தார்.

“பாடசாலை மாணவர்கள் மத்தியில் இதுகாலவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒழுக்க விழுமியங்களில் சிகையலங்காரமும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. மாணவர்களின் பாடசாலை வாழ்க்கைக் காலத்தில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த ஒழுக்க விழுமியங்களை அனைத்து சமூகப் பாடசாலைகளும் மதித்தொழுகுகின்றன.

எனவே, வெளி உலக வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் உன்னதமான பள்ளிப்பருவ காலத்தில் கடைப்பிடித்தொழுக வேண்டிய பாடசாலை ஒழுக்க விழுமியங்களைச் நாகரீகமென்ற பெயரில் இடம்பெறும் அநாகரிக நவீன சிகை அலங்காரங்கள் இல்லாதொழித்து விடுகின்றன.

பாடசாலை மாணவர்களை நடை, உடை, பாவனை, பராமரிப்பு ஆகிய இன்னோரன்ன ஒழுக்க விழுமிய சிறப்பம்சங்களுடன் தயார்படுத்தவேண்டியது ஒட்டு மொத்த சமூகத்திலுள்ள அனைவரதும் பொறுப்பாகும்.
இந்த இலக்கை அடைந்து கொள்வதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். நாளைய சமுதாயத்தை நற்பண்புள்ளவர்களாக உருவாக்கும் இந்த மகோன்னத பணியில் சிகையலங்காரிகளும் இணைந்து கொள்ள வேண்டும்.

காத்தான்குடி நகர சபைப் பிரிவில் இந்த சமூகப் பொறுப்பை மீறும் சிகையலங்கார நிலையங்களின் அனுமதி உடனடியாக இரத்து செய்யப்படும்” என்றார்.


சிகையலங்காரிகளுடனான இக்கலந்துரையாடலில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல். நஸ{ர்தீன், காத்தான்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், காத்தான்குடியிலுள்ள ஆண்கள் பாடசாலைகளின் அதிபர்கள், மற்றும் அங்கு கடமையாற்றும் ஒழுக்காற்று விடயதான ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]